Monday, October 10, 2016

புலியூரின் ஓவியங்கள் - சிறுகதைதீராநதி ஏப்ரல் 2015


 

வட்ட மேசையைச்சுற்றி ஏழெட்டு நாற்காலிகள். இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த மூவரும் எதிரே நின்ற நான்கு ஓவியங்களை வெறித்தனர். "ரெண்டத் தேர்ந்தெடுக்கறதுல பெரிய பிரச்சனை இல்ல. இதுல எதுன்றதுல நமக்கு நேரமாகும் போல. இது புரியற மாதிரி அது புரில, அதான் யோசிக்க வேண்டியதா இருக்குது,” என்று உலகநாதன் முடிக்கும் முன்னர், "நமக்குத் தெரிஞ்சத அப்டியே தரணும்னா அப்புறம் படைப்பு எதுக்கு, போட்டி தான் எதுக்கு?”  -  என்று சிடுசிடுத்தான் பித்தன்.
இருவருக்குமிடையே சட்டென்று சமரசத்தைக் கொணரும் முயற்சியில், "அதோ ஒரு சின்ன ஸ்ட்ரோக் தெரியுது பாருங்கய்யா, மஞ்சளும் கறுப்புமா,.. ம்?," என்றார் அம்மணி.
"ரொம்பவே உத்துப் பாக்க வேண்டிதா இருக்குது. ஆனா, இதப் பாருங்க. கொழந்தைக்கி கூட புரியும். மொத்த கேன்வாஸுமே புலிதான். எவ்ளோ எங்கேஜிங்கா இருக்கு. புலிமேல அதோ அந்த செருப்புக்கால் ஒண்ணு போதுமே. ப்பா, ஆயில் வேற, வெரி இண்ட்ரஸ்டிங்," பித்தனுக்குப் பிடிக்கும் என்று கருதி வலுவில் ஆங்கிலம் கலந்தார் தூயதமிழ் பற்றாளர் உலகநாதன்.
"அத சரியாப் பாக்கக் கூட இல்ல நீங்க." -  பித்தன் முறைத்தான்.
"பாத்தாச்சி. எங்களுக்குப் புரிலயே. புரியற மாதிரி இருக்க வேணாமா, ஒரு படைப்பு?"  -   இழுத்தவாறே கூறிய உலகநாதன் தலையைச் சொறிந்தார்.
"செமி அப்ஸ்ட்ராக்ட் சார்."
"புலிவாலே கண்ணுக்குத் தெரியாம இருக்கறதா?"
"ஓவியத்தப்பாக்க வரவங்க மூளையக் கழட்டி வச்சிட்டு வரமாட்டாங்க சார்."
"நா வந்துருக்கேன்றீங்களா?"
"மன்னிக்கணும் சார், நா அப்டி சொல்லல."
"இதான் புலியூர் பரிசுக்குத் தகுதியா எனக்குப் படுது. என்ன சொல்றீங்க அம்மணி நீங்க?"
வேகமாகத் தலையாட்டி ஆமோதித்த அம்மணியை திருப்தியுடன் கவனித்தவாறே, "என்ன ஒண்ணு, புலிய அவன் அடிச்ச மாதிரி இல்லாம புலி அவன அடிச்ச மாதிரி இருந்தா இன்னும் கூட நல்லாருக்கும்," என்றார்.
" எல்லாத்துலயும் புலியவே தேடணுமா?," -   கடுப்பான பித்தன் விடுவதாக இல்லை.
"என்ன அப்டி கேட்டீங்க? நாளைக்கே மன்றத்துல எதும் பிரச்சினைனா,...யாரு பதில் சொல்றது? என்ன தானே கூப்டுவாங்க."
"ஓவியத்த தானே நாம மதிப்பிட வந்திருக்கோம்?"
"அரசன் கொடுக்கற நிதில தானே மன்றம் போட்டியவே நடத்துது?"
"மேலிடமே கொள்கைகள மாத்திகிட்டாலும் இப்டி காலங்காலமா மனசுக்குள்ள மாத்திக்காம பழச பொத்திப் பொத்தி வச்சிக்கறதாலதான் முன்னேற்றம் இல்லாம இப்டி இருக்கோம்."
"ரிஸ்க் எடுக்க முடியாதில்ல. புரிஞ்சிக்கங்க தம்பி. "
"அப்டினா இந்தப் போட்டிக்கே அர்த்தமில்ல சார்." - பித்தன் எழுந்தான்.
"என்ன இப்டி அதிரடியாச் சொல்றீங்க?
"குறியீட்டுப் படைப்புகளுக்கான காலமா சார்  இது?" - அதே புள்ளியிலேயே விலகாமல் நின்றான் பித்தன்.
"அதான் தம்பி என்னைக்குமே நெலச்சி நிக்கும். இப்ப நாங்கள்லாம் இல்ல? "
"எப்டி? நமக்கு நாமே திட்டமா?"
"எனக்கெல்லாம் என்னைக்கும் ஒரே மதிப்பீடு தான். என்னால மாத்திக்க முடியாது."
"மாத்திக்காம இருக்கறதுல ஒரு பெருமயா? உலகளவுல வேணாம். அட் லீஸ்ட் வட்டார அளவுலயாச்சும் காலத்துக்கு ஏத்த மாதிரி முன்னேற வேணாமா?"
"முன்னேற்றம்னு எதச் சொல்றீங்க?"
"அந்த ஓவியத்துல தயிர்சாத வாசம் உங்க மூக்க ரொம்பத் துளைக்குதோ? பரிசு கொடுக்காம இருக்க உங்களுக்கு சின்னச் சின்னதா, சின்னத்தனமான எவ்ளோ காரணங்கள், ம்?"
"தம்பி, வார்த்தைய அளந்து பேசுங்க."
நாசூக்காக இருமுறை கதவைத் தட்டிவிட்டு முறுவலுடன் மூன்று காப்பிக் கோப்பைகளை சிறு தட்டில் ஏந்தி வந்து மேசை மீது வைத்து விட்டு முறுவலோடு திரும்பிச் சென்றார் மன்ற ஊழியர்.
"முன்ன நகராம உறைஞ்சு அப்டியே நின்னா கூட பரவால்ல. பின்னோக்கி தான் போவேன்னு அடம் பிடிச்சா கலை வெளங்கிரும். இதுக்கு பரிசு கொடுத்து தூக்கி மேல வச்சீங்கன்னா புலியூர் படைப்புலகம் குறித்த பார்வை வெளில எப்டி இருக்கும், தெரியுமா?," என்றான் பித்தன்.
"அதப்பத்தின அக்கற எங்களுக்கும் இருக்கு."
"இருக்கற மாதிரி தெர்லயே."
"வயசுக்காச்சும் மரியாத தரணும் தம்பி நீங்க."
"அதே அக்கறைல இன்னும் ஒண்ணு சொல்லிக்கறேன் சார். இதுக்கு பரிசு கொடுத்தா புலியூர் முழுக்க இதேபோல தட்டையா, மேம்போக்கான குறியீட்டுப் படைப்புகளா நெறைய மொளைக்கும். ஆர்வக்கோளாறுகள்தான்  நெறையவே இருக்கே நம்மூர்ல. போட்டி முடிவுகள் ஆரோக்கியமான  பாதைய அமைக்க வேணாமா?"
"குடும்பத்தயும் பார்த்துகிட்டு வியாபாரத்துக்கு நடுவுல, ஒத்தக்கால்லயே நின்னு, ராத்தூக்கம் முழிச்சி ரொம்பக் கஷ்டப்பட்டு வரஞ்சிருக்காருங்க இத. தெரியுமா?"
"சரி, உங்க வாதத்துக்கே வரேன். மத்தவங்கள்லாம் கஷ்டமே படாமதான் வரஞ்சாங்கன்றீங்களா?"
"என்ன கஷ்டப்பட்டாங்க?,"  என்றார் அம்மணி காப்பியை உறிஞ்சி விட்டு.
"நீங்களே இப்டிக் கேட்டா நா என்ன சொல்ல? பிள்ளைகளப் பெத்து வளக்கறதுல எவ்ளோ கஷ்டங்கள் இருக்கும்?"
"ஆனா, இவரு பட்ட கஷ்டத்தையெல்லாம் மேடையோ மேசையோ மைக்கோ கெடச்சா விலாவாரியா விரிச்சு எவ்ளோ அழகா எல்லார்கிட்டயும் உருக்கமா ஒண்ணு விடாம பகிர்ந்துப்பாரு, தெரியுமா? அந்தம்மா எதையாச்சும் வெளிய வெளிப்படையாச் சொல்லிருக்காங்களா?"  - உலகநாதன்.
"ஆனா, அதுக்கான தேவை என்ன?"
"சமூக ஊடகங்கள்ல தினமும் கொறஞ்சது ரெண்டு தடவ தன்னோட, தன் புத்தகத்தோட படத்த பதிவிடுவாரு. எவ்ளோ உழைப்பு, என்னவொரு ஈடுபாடு, தெரியுமா?
" மாத்திட்டாங்களா? அதுக்கெல்லாம் இப்ப இதான் பேரா?"
"ஆனா, அவங்க இதேமாதிரி நல்லா ஏர்கண்டிஷன்ல இருந்துகிட்டு வசதியா வரயறாங்க."
முகமெல்லாம் சிரிப்புடன் மிக ஆர்வமாகக் கையுயர்த்தியபடி குறிக்கிட்ட அம்மணி, "வீட்ல பிள்ளைக வைக்கிற மிச்சம் மீதிய சாப்டு சாப்டு கொழுத்து குண்டாகறாங்க. அத விட்டீங்களே அய்யா,.."
சடாரென்று நாற்காலியில் இருந்து பாய்ந்து எழுந்த பித்தன், "படைப்ப மதிப்பிடறதுக்கு உங்கள உக்கார வச்சா எதையெதையோ பேசறீங்க? முன்னாடி நாலு எழுத்து இல்லன்னா பின்னாடி மூணு எழுத்து போட்டுக்க மட்டுமே சொல்லிக் கொடுத்திருக்கா உங்க உயர்கல்வி? இல்ல, தெரியாம தான் கேக்கறேன், அவங்க பருமனா இருந்த உங்களுக்கென்ன, ஒல்லியா இருந்தா உங்களுக்கென்ன? நாம என்ன அழகிப் போட்டியா நடத்தறோம் இங்க?," என்றவாறே அறையை விட்டு வெளியேறிவிடலாமா என்று எண்ணினான்.
"எல்லா எடத்துக்கும் கார்லயே போய்வராங்க. வசதி இருக்கறவங்களுக்கே எதுக்கு பரிசுப் பணத்தக் கொடுக்கணும்? அதோட அவங்க வேலைக்கும் போகல,.," என்றார் அம்மணி தணிந்த குரலில்.
"நாமல்லாம் செய்றமே, கூலிக்கு மாரடிக்கறது அதத்தானே சொல்றீங்க. ஆனா, வேலைக்கிப் போறவங்க தான் படைப்பு அனுப்பணும்னு விதிமுறைல இருக்கா?," குரலை உயர்த்தினான் பித்தன்.
"இல்ல. ஆனா அவங்க தன் படைப்பப் பத்தி பெரிசா பெருமிதப்படறதில்ல."
"பெருமிதம் இருந்தா அத பொதுவிடத்துல கூச்சநாச்சமில்லாம  கடைப் பரப்பணும்னு சட்டமா, என்ன?"
"சொந்த அனுபவத்த அவங்க வரயறதில்ல. காட்டுக்குப் போகாமயே காட்டுச் சூழல தீட்டறாங்க. இதுல கூட," என்ற அம்மணியின் பக்கம் திரும்பிய பித்தன், "போன மாசம் பிள்ளைவளர்ப்பு பத்தின புத்தகம் எழுதி வெளியிட்டாங்களே குஷ்புவக் கூப்டு ரொம்பக் கோலாகலமா? அந்தம்மாவுக்கென்ன பிள்ளையா குட்டியா?," எரிச்சலில் குரலை உயர்த்தினான் பித்தன்.
"ஏன் கோபப்படறீங்க?" – என்று அம்மணி கேட்டது அவர் காதுக்கே கேட்கவில்லை.
"மரணம் பத்தி கவிதை எழுதினாரே பெரியவரு, நீங்களும் ஆஹா ஓஹோனு ஒரேயடியாத் தூக்குனீங்க, அவரு என்ன செத்துப் போயிட்டு திரும்ப வந்துதான் அந்தக் கவிதைய எழுதினாரா?"
"ரொம்பப் பேசறீங்க,..," என்றார் அம்மணி.
"சரி, சரி விஷயத்துக்கு வாங்க."  -  உலகநாதன்.
"சார், எந்தச் சூழல்ல வரஞ்சாங்க, என்ன மாதிரியான பின்புலம் படைப்பாளிக்கு வாய்க்குதுன்றதெல்லாம்  போட்டி விதிமுறைகள்ள,."
"இல்ல."
"அப்ப எதுக்கு சார் அந்தப் பேச்சு?"
"அவருக்குக் கொடுக்கக் கூடாதுனு நீங்கநெனைக்கறதுக்கு என்ன காரணம்னு சொல்லுங்க தம்பி."
"இதுல புதுசா ஒண்ணுமே இல்ல சார். இது போல கடந்த நாற்பதாண்டுகள்ல பல்லாயிரம் பெயிண்டிங்க்ஸ் வந்திருக்கு. இன்னொண்ணு அனுப்பினாரே, கருப்பு வெள்ளைன்னு ஏதோ ஒரு சப்பக் காரணம் சொல்லி நா அவ்ளோ சொல்லியும் அத தேர்வுப் பட்டியலுக்குக் கூட கொண்டு வர விடல நீங்க. நெஜமாவே தனித்துவஆக்கம் அது. இதுக்கு பரிசு கொடுத்தா அவருக்கே அதிர்ச்சில மயக்கம் வந்துரும்."
"அவரு அதிகம் வரையலன்ற காரணமா?"
"நெறைய, கொறையனு நா நெனைக்கல்ல. சொல்லப்போனா யாரோடதுனு கூட நெனைக்கல. அப்டியெல்லாம் நெனைக்க வேணாம்ன்றேன்."
"நெறைய வரஞ்சவங்களோடதெல்லாம் சிறந்ததா இருக்கணும்னு இல்லயே தம்பி. கொறச்சலா வரஞ்சவங்களோடதெல்லாம் மோசம்னும் இல்ல."
"ரொம்பச்சரி. அதேபோல கொறச்சலா வரஞ்சவங்கன்றதாலே அவங்க படைப்பு சிறந்ததுன்ற முன்முடிவும் சரியில்ல. நெறைய வரஞ்சிட்டாங்க, பேரெடுத்துட்டாங்கன்றதாலேயே ஒரு கலைஞர ஒதுக்கறது, இருட்டடிப்பு செய்யறதும் முறையே இல்ல."
"புதுசாவும் ஆட்கள் வரணும்ல தம்பி."
"ஆமா, கண்டிப்பா வரணும். ஆனா, ஏற்கெனவே அனுபவமும் அங்கீகாரமும் இருக்கறதே தப்பா? "
"அவங்களுக்குதான் நெறைய கவனங்கள் கெடச்சாச்சே."
"அப்டினா புதுக் கலைஞர்களுக்கு மட்டும்னு போட்டி விதிமுறைல இருக்கணுமே சார். "
"அவங்க நிரந்தரவாசி."
"குடிமக்கள் மட்டும்தான் கலந்துக்கணும்னு விதிமுறைல,.."
"இல்ல. நிரந்தரவாசியும் பங்கேற்கலாம்னுதான் இருக்கு. ஆனா, ஒத்தக்கால்லயே நின்னு ராத்திரியெல்லாம் கண்முழிச்சு வரயறதுன்றதெல்லாம் சும்மாவா, நீங்களே சொல்லுங்க? வீடியோ கூட எடுத்துருக்காங்க."
"கொழந்தைய இடுப்புல வச்சிகிட்டே வரஞ்சாங்க, காய்வெட்டிகிட்டே, வீட்ட மெழுகிக்கிட்டே, இட்லி மாவாட்டிகிட்டு, தோச சுட்டுகிட்டே மிகக் கடுமையா யோசிச்சாங்கனு அவங்களும் சொல்லிக்கலாமா?"
"ம், சொல்லட்டுமே,.. ஏன் சொல்லல?"
"படைப்புன்றது மட்டுமே அவங்களுக்கு முக்கியமா படுது. அதான் வெளிய சொந்தப் பிரச்சனையச் சொல்லிக்கறதில்ல. அதுகூடப் புரில உங்களுக்கெல்லாம். டாய்லட்ல ஒக்காந்து வரையறதா, முட்டிபோட்டு கிட்டே வரையறதா, ஜட்டியோட வரையறதா, இல்ல அதுவுமில்லாம வரையறதான்றதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விருப்பம், வசதி சார். அதயெல்லாம் வெளிய பெருமையாவோ புலம்பலாவோ சொல்ல வேண்டிய அவசியம் தான் என்ன?"
"அவங்கநியூட்லாம் வரையறாங்க, தெரிமா?" – அம்மணி தழைந்த குரலில்.
"அதனால?"  - பல்லைக்கடித்தான் பித்தன்.
"அதயெல்லாம் விடுங்க. அந்தம்மா உங்களுக்கு ஒரு வணக்கம் கூட சொல்லாது. ஆனா, இவரு நற்றமிழ் விழா மேடைல உங்கள எவ்ளோ பாராட்டிப் பேசினாரு."  -  உலகநாதன்
"அதெல்லாம் வேற சார். நாங்கேக்கறது இதான். ஒரு படைப்பாளி வெளிப்படையா இருக்கணும்னு போட்டி விதிமுறைல இருக்கா?"
"நீங்க என்ன எப்பயும் அதையே கேக்கறீங்க? உங்களுக்கு விதிமுறைகள்  கொடுக்கப் படலயா?"
"படைப்பை மதிப்பிடும்போது படைப்பாளிய பத்தி ஏன் இழுக்கறீங்கன்றேன்."
"படைப்பாளி இல்லாம படைப்பு ஏது தம்பி? படைப்பாளி முக்கியம் தானே?"
"இல்ல,. படைப்பு உருவான கணத்துல படைப்பாளி மறைஞ்சிரணும்."  - பித்தன்
ஙே என்று விழித்தார் உலகநாதன்.
"விடுங்க, நா உங்களக் கஷ்டப்படுத்த விரும்பல. உங்களுக்குப் புரியாது. ஆனா, போட்டித் தேர்வின் போது இதையெல்லாம் கணக்குல எடுத்துக்கப் போறோம்னா அதிகாரபூர்வமா விதிமுறைல இருக்கணும்ல, அதான் திரும்பத் திரும்பக் கேக்கறேன்."
"இதுக்குதான் இந்தாள நடுவர் குழுல எடுக்க வேணாம்னேன். பொருத்தமாதான் வச்சிருக்கான் பேரு. இளம் தலைமுறை வேணும்னீங்கல்ல, நல்லா அனுபவிங்க,.." - அம்மணி காதில் கிசுகிசுத்தார் உலகநாதன்.
"வாராவாரம் நேரம் ஒதுக்கி மேச போட்டு கூட்டம் கூட்டி எவ்ளோ பேசறாரு தெரியுமா அவரு? நெறைய பேரக் கூப்டு கூடிப் பேச வாய்ப்பும் ஏற்படுத்தறாரு."
 ஏடு கட்டிய காப்பியை வெறித்தவாறே, "ம்,. ம் வெட்டி வம்புனு கேள்விப்பட்டேன்," ‍ என்றான் பித்தன்.
"ஒரு நிகழ்ச்சி விடாம போவாரு."
"இப்ப நாம செஞ்சிட்ருக்கற வேலைக்கி அதெல்லாம் எதுக்கு?"
"என்ன உபசரிப்பு தெரிமா?"
"ஓஹோ." – என்றான் பித்தன் அலுப்புடன்.
"கண்மூடி மெய்மறந்து நொடிநொடியா ரசிச்சி எல்லாரையும் உபசரிக்க புலியூர்ல அவர விட்டா வேற ஆளே கெடையாது, தெரிமா?"
முகமெல்லாம் பூரிப்புடன் அம்மணி, "ஆமா, தேர்வுப் பட்டியல்ல தன் படைப்பு வந்திருக்குன்ற செய்திய போனமாசம் என்கிட்ட ஃபோன்ல  சொல்லி கேவிக்கேவி அழுதுட்டாருங்கய்யா,"  என்றார்.
பித்தன் இடையில் புகுந்து, "அப்ப ஒண்ணு செய்வம். இன்னொருத்தங்க இருப்பாங்களே மூக்குக்கண்ணாடி போட்டுகிட்டு சிரிக்கச்சிரிக்க உரக்கக் கத்திப் பேசுவாங்களே சார், பேசாம அவங்க ஓவியத்துக்கு குடுத்துருவமா? அவங்க ரொம்ப நல்லா பேசுவாங்கன்னு காரணமும் எழுதிடுங்க," என்று இடக்காகக் கேட்டான்.
"அதெப்டி? தேர்வுப் பட்டியல்லயே இல்லயே அது,.. அது ரெப்ளிக்கா, ஒரிஜினல் இல்லயே. "
"ம், அதாவது தெரியுதே, சந்தோஷம். ஒரு சந்தேகம் சார். நடுவர்கள் சொந்த விருப்பு வெறுப்ப காட்டக்கூடாதுனு காலைல நீங்கதான பிரீஃப் பண்ணீங்க, இப்ப நீங்களே எதையெதையோ சொல்றீங்களே சார்."
"அதெல்லாம் ஒரு சடங்குதானே தம்பி. நாம பலதையும் ஆராய வேண்டியிருக்கில்ல."
"சரி, இந்த ஓவியத்த அவங்களும் கஷ்டப்பட்டு கழிவறைல அம்மணமா, ஒத்தக்கால்ல நின்னு தூக்கம் முழிச்சி வரஞ்சாங்கன்னு ஆதாரத்தோட மைக் பிடிச்சி சொன்னா அவங்க ஓவியத்துக்கு பரிசுக்குரிய தகுதி வந்திருமா?"
"விதண்டாவாதம் பேசறீங்க."
"நீங்க மட்டும் அவரு ஒத்தக்கால்ல நின்னு வரஞ்சாருன்னு அதயே முக்கியத் தகுதி போலச் சொல்றீங்க."
"உண்மங்க. காணொளி பாக்கறீங்களா?"
"ஏதும் சாதனைக்கா?"
"என்ன?," என்ற உலகநாதன் முகத்தில் சலிப்பு.
"இல்ல, ஏதும் உலக சாதனைக்கானு கேட்டேன்."
"இந்தப் போட்டிக்காகத் தாங்க ஒத்தக்கால்லயே நின்னு வரஞ்சிருக்காரு."
" ஆனா, சாகசம் காட்டணும்னு விதிமுறைல இல்லையே. "
"அந்தம்மாவும்தான் அலுக்காம வரையறாங்க, போட்டிக்கு அனுப்பறாங்க. அதான் நாலாவது முறையா தேர்வுப் பட்டியல்வரைக்கும் கொண்டு வந்திருக்கோமே," என்றபடியே தன் கைப்பேசியை நோண்டினார் உலகநாதன்.
"அடடா, எவ்ளோ பெருந்தன்மை! நேரடியாவே என் முடிவ சொல்லிர்றேன். அந்த ஓவியத்துக்கு இந்த முறை புலியூர் பரிசு கொடுக்கணும்."
"அவங்களுக்குக் கொடுத்தா, முழுத்தொகையும் இல்லாம, வெறும் ஊக்கப்பரிசாவேணா கொடுக்கலாம்."
"ஏன்?"
"அவங்களுக்கு இல்லாத வசதியா?"
"இதெல்லாம் அநியாயம் சார். ஓவியத்த மதிப்பிடறதத் தவிர மத்த எல்லாத்தையுமே பேசறீங்க. உங்களோட சேர்ந்து நானும் பேசிட்ருக்கேன்றத நெனச்சா எனக்கே என் மேல ஆத்திரமா வருது. சரி, வசதி இல்லாதவங்க மட்டுமே கலந்துக்கணும்னு,.,.."
"இல்ல. விதிமுறைல இல்ல. ஆனா, அவங்களோடதுக்கு பரிசு கொடுத்தம்னா இதுவரைக்கும் கொடுக்கப்பட்ட படைப்புகள் தனியா நிக்கும். ரொம்ப தனிச்சு தெரியும். அப்பட்டமா சொல்லணும்னா பளிச்னு ரொம்பவே விகாரமா பல்லிளிக்கும். என்னோடதும் சேர்த்துதான்."
" கேட் இஸ் அவுட் ஆஃப் பேக்.  இப்ப சொன்னீங்களே, இது, இதான் உண்மையான காரணம். உங்களுக்கே தெரிஞ்சிருக்குன்றது எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கு."
"ஐய்யயோ, இல்லல்ல. நா ஒரு வாதத்துக்கு சொன்னேன். ஒடனே உங்க வசதிக்கி பிடிச்சிக்காதீங்க."
"வெளியூர் நடுவர் கருத்தையும் கணக்குல எடுக்கணும்ல? "
"அதெல்லாம் சும்மா கண்துடைப்பு தானே தம்பி. ஜிகுஜிகுன்னு பட்டுப்புடைவை நகையெல்லாம் சாதிகிட்டு அந்தம்மா உல்லாசமா பூலியூர் வந்து இறங்கி அங்கங்க நின்னு சகஜமாப் பேசிட்டு வந்த மாதிரியே நலுங்காம திரும்பிப் போய்ருவாங்க. வசதிக்கி தானே வேற யாரையும் நாம கூப்டறதில்ல. யார் படைப்புக்கு கொடுக்கறோம்னு ஒரு சின்ன சீட்ட எழுதி அவங்க கையில திணிச்சி மேடைக்கி அனுப்பினா முடிஞ்சது. இப்ப நாம எடுக்கறது தான் முடிவு."
"நீங்க எடுக்கறதுனு சரியாச் சொல்லுங்க சார்." - பித்தன் எரிச்சலுடன் எழுந்தான். "பரிசுகளையும் அங்கீகாரங்களையும் அவங்க ஏன் பொருட்படுத்தறதே இல்லனு இப்பப் புரிஞ்சிருச்சு எனக்கு," என்றவாறே அறையை விட்டு விறுட்டென்று வெளியேறினான்.
சலனமே இல்லாத நான்கு ஓவியங்களும் அதே இடத்தில் உறைந்தவாறு வெறித்தன.


                              
                              சிறுகதை இடம்பெறும் நூல்


நகரெங்கும் சிதறிய சுழிகள்
வம்சி புக்ஸ் - 2016
19, டி.எம்.சரோன்,
திருவண்ணாமலை - 606601
ISBN: 978-93-84598-25-9 
விலை: ரூ 110நூல் உள்ளடக்கம்

        முன்னுரை
1.      உன் பெயர் என்ன?
2.      புலியூரின் ஓவியங்கள்
  1. சூதாடியின் வாரிசுகள்
  2. புலியூர் வந்த காவலன்
  3. இந்நு அவதியாணு
  4. நகரெங்கும் சிதறிய சுழிகள்
  5. வார்ட் 34பி
  6. தூரம்
  7. கை
  8. இருக்கை
  9.  நூல் பொம்மை