Tuesday, April 20, 2010

பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் -- ஜெயமோகன்




பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள காரணங்கள் சிலவற்றை முன்வைப்பார்கள்.ஐரோப்பாவில் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியதில் கிறித்தவ தேவாலயத்தின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. அரேபியாவில் இஸ்லாமின் பங்கு இன்றும் அழுத்தமாகவே தொடர்கிறது. இந்தியாவில் மனுநீதி போன்ற மதநீதிநூல்கள் சுட்டப்படுகின்றன. ஆனால் உலகவரலாற்றை எடுத்துப்பார்த்தால் எங்கும் பெண்மீதான அடக்குமுறை ஒரே மாதிரியாகத்தான் இருந்துவந்துள்ளது என்பதைக் காணலாம். பழங்குடிச் சமூகங்களில் பெண்ணடிமைத்தனம் உச்சநிலையில் இருப்பதை இன்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளார்கள். அப்படியானால் பெண்ணடிமைத்தனம் என்பது சுரண்டல் போல மானுடப் பண்பாட்டின் ஒரு இயல்பான பரிணாமக்கூறா என்ன?

ஆனால் எங்கு அரசுகள் வலிமை பெறுகின்றனவோ அங்கே பெண்ணடிமைத்தனம் மேலும் இறுக்கமாகிறது.எங்கே பேரரசுகள் உருவாகின்றனவோ அங்கே அது உச்சத்துக்குச் செல்கிறது. உலக வரலாற்றில் இதற்கு விதிவிலக்கே இல்லை. உலகின் மாபெரும் பேரரசுகள் தொடர்ந்து கோலோச்சிய சீனா பெண்ணடிமைத்தனத்தின் அதி உச்சங்களைத் தொட்டிருப்பதை இயல்பாகவே காணவேண்டும்.

ஜெயந்திசங்கரின் 'பெருஞ்சுவருக்குப் பின்னால்' சீனப்பெண்களின் வரலாற்றையும் வாழ்க்கையையும் கூறும் முக்கியமான தமிழ் நூல். இந்தவகைப்பட்ட ஒருநூல் தமிழில் இதற்கு முன் வந்ததாகத் தெரியவில்லை. தமிழில் பல கோணங்களில் பெண்ணியம் பேசப்படும் இன்று அதற்குரிய முக்கியமான மூலநூலாக விளங்கக் கூடிய இந்நூலைப்பற்றி இன்றுவரை எந்தப்பெண்ணியவாதியும் பேசிக்கேட்கவில்லை என்பது தமிழ்ச் சூழலைவைத்துப் பார்த்தால் வியப்புக்குரியதுமல்ல.

உலக இலக்கியம், உலக அரசியல் பயின்று விவாதிக்கும் வாசகர்களுக்குக் கூட இந்நூல் முன்வைக்கும் தகவல்கள் ஆச்சரியமூட்டக் கூடும். காரணம் பொதுவாக சீனா பற்றி நாமறிந்தது மிக குறைவே. பத்து சீன எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லக்கூடியவர்கள் நம்மில் அனேகமாக யாருமிருக்கமாட்டார்கள். ஜெயந்தி சங்கர் சீனப்பெண்களைப் பற்றி சொல்லும் தகவல்கள் பெரும் புனைவுகளுக்கு நிகராக உள்ளன.

சீனப்பெண்ணை அடிமைப்படுத்தியதில் தத்துவ மேதை கன்பூஷியஸின் பங்கு முக்கியமானது என்று சொல்கிறது இந்நூல். பெண் இரண்டாம்பட்சமானவள் என்றும் பலவீனமானவள் என்றும் கட்டுப்படுத்தப்படவேண்டியவள் என்றும் கன்பூஷியஸ் சொன்னது சீன மனதை ஆழமாகப் பாதித்திருக்கிறது. பெண் ஆணின் மகிழ்ச்சிக்காக மட்டுமே படைக்கப்பட்டவள், ஆணுக்காகத் துயருறுவது மட்டுமே அவளது வாழ்க்கை என பெண்களுக்குப் போதிக்கப்பட்டது. அவள் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. சீனக்குடும்பம் என்பது மிக வலுவான ஓர் அமைப்பு. முற்றிலும் பெண்மீதான ஒடுக்குமுறையால் உருவாக்கி நிலைநிறுத்தப்படுவது அது

கிட்டத்தட்ட பல விஷயங்கள் இந்திய மரபை ஒட்டி உள்ளன. ஆண் ஒரு குடும்ப்பபெண்ணுடன் கொள்ளும் உறவு என்பது முழுக்க முழுக்க மகப்பேறுக்காக மட்டுமே என்ற நிலை இருந்திருக்கிறது. காம நுகர்ச்சிக்காக ஆண் விலைமாதரையும் வைப்பாட்டிகளையும் நாடிச்செல்வது முற்றிலும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகவே பண்டைத்தமிழகம் போல சீனமும் பெண்சமூகத்தை இவ்விருவகைப்பட்ட பெண்களாக பிரித்து வைத்திருந்தது. இருசாராரும் இருவகையில் சுரண்டப்பட்டார்கள். பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்கப்படவில்லை. அவள் திருமணம் முடித்து அனுப்பபடும்போது சிறிய வரதட்சிணை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின் அவளுக்கு பிறந்தவீட்டுடன் எவ்விதமான உறவும் இல்லை. பெண் பிறப்பது விரும்பபடவில்லை. பெண்சிசுக்கள் சாதாரணமாக கொன்றழிக்கப்பட்டு இன்று சீனாவில் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மிகச்சிறந்த அடிமையாக ஆதல் என்பதே கற்பு என சீனமரபு குறிப்பிட்டது.

இந்நூலில் சீனப்பெண்களின் கால்கள் சிறுவயதிலேயே ஒடித்து கட்டப்பட்டு 'தாமரைப்பாதம்' உருவாக்கப்பட்டு அவள் நிரந்தரமாக ஊனமுற்றவளாக ஆக்கப்பட்டதன் விரிவான சித்திரம் உள்ளது. அடிபப்டையில் பெண்ணை நீண்டநேரம் நிற்கவோ ஓடவோ தன்னைக் காத்துக்கொள்ளவோ முடியாதபடி பலவீனமானவளாக ஆக்கும் நோக்கம் கொண்ட இம்முறையானது ஓர் அழகூட்டும் சடங்காக பண்பாட்டில் முன்வைக்கபப்ட்டது. உயர்குடிப்பெண்கள் அதைச் செய்துகொண்டார்கள். உயர்குடிகளாக ஆக விரும்பும் நடுத்தரகுடிகளும் அதைப் பின்பற்றினர். மொத்த சீனப்பெண்களில் முக்கால்வாசியினர் ஒருகாலத்தில் இதற்கு ஆளாயினர்.

மிக மிக கொடூரமான ஒரு சித்திரவதை இது. மிக இளம் வயதிலேயே பாதங்கள் ஒடிக்கப்பட்டு சதையை வெட்டி காலை மடக்கி பட்டுத்துணியால் இறுகக் கட்டுகிறார்கள். உள்ளே கால் வருடக்கணக்காக வலியில் அதிர்கிறது. சதைகள் அழுகி புண்ணாகி உலர்கின்றன. எலும்புகள் முறிந்து பொருந்துகின்றன. பலசமயம் விரல்கள் உதிர்ந்துபோகின்றன. இப்போது படங்களில் அக்கால்களைப் பார்த்தால் அதிர்ச்சியும் அருவருப்பும் உருவாகிறது. அன்று அது ஆண்களுக்கு காமக்கிளர்ச்சியை அளித்திருக்கிறது. ஜெயந்திசங்கர் அவ்வழக்கத்தில் தோற்றம் அதன் சடங்குமுறைகள் அது மறைந்தவிதம் ஆகியவற்றைப்பற்றிய விரிவான செய்திகளை அளிக்கிறார்.

தமிழ் வாசகர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் விஷயம் சீனாவில் பெண்களுக்கு மட்டுமாக, பெண்கள் நடுவே ஆண்கள் அறியாமலேயே புழங்கிய ஒரு தனி மொழி இருந்திருக்கிறது என்பது. நுஷ¥ என்ற அம்மொழி பெண்களால் வழிவழியாக கைமாறப்பட்டு தங்கள் துயரங்களை பரிமாறிக்கொள்ளவும் செய்திகள் அனுப்பவும் பயன்பட்டிருக்கிறது. சீன சித்திர லிபியிலேயே அதையும் எழுதியிருக்கிறார்கள். அதில் முக்கியமான கவிதைகள் வந்திருக்கின்றன. இம்மொழிக்கு பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லை. இது அனைவரும் கேட்க பேசபப்டுவதில்லை. பின்பு மெல்லமெல்ல அம்மொழி வழக்கொழிந்துபோயிருக்கிறது. அதை அறிந்திருந்த சிலரை அன்றைய கம்யூனிசக் கலாச்சாரப்புரட்சியாளர்கள் வலதுசாரிகள் என முத்திரைகுத்தி அழித்தனர். அதை மிஞ்சி எஞ்சிய தடையங்களை இன்றைய சீன அரசு சுற்றுலாக்கவற்சியாக பயன்படுத்துகிறது

ஒடுக்கபடும் பெண் இருவகையில் அதிகாரத்தை அடைகிறாள் என்பதை வரலாறு காட்டும். ஒன்று தன் காமக்கவற்சியையே தன் ஆயுதமாக்கி அவள் அதிகாரத்தை அடைகிறாள். இரண்டாவதாக தன் மதிநுட்பம் மற்றும் குரூரம் மூலம் அதிகாரத்தை அடைகிறாள். இரண்டு முகங்களுமே கொண்ட பெண்கள் வரலாற்றில் அதிகம். சீனாவின் இணைசொல்லமுடியாத பெண்ணடிமைச் சூழலில் ஆசைநாயகியராக உச்சகட்ட அதிகாரத்தை அடைந்த பெண்களின் கதைகளை ஜெயந்திசங்கர் சொல்கிறார். அரசி வூ ஹேவ் ஆசைநாயகியாக இருந்து அரசியானவள். அதேபோல பேரரசி டோவேஜர் தன் குரூரம் மூலமே அதிகாரத்தை வென்று கையாண்டாள்.

சீனாவின் பண்டைய வரலாற்றுதடயங்கள் அழிக்கபப்ட்டு சீனமக்களில் கணிசமானோர் கொல்லப்பட்ட கொடுமையான கலாச்சாரப்புரட்சியே சீனப்பெண்களின் விடுதலைக்கும் காரணமாக அமைந்தது என்ற வரலாற்று முரண்பாட்டையும் நாம் இந்நூலில் காண்கிறோம். சீனப்பெண்களின் வரலாறு சமகாலம் வரை விரிவான தகவல்களுடன் சொல்லப்பட்டுள்ள இந்நூல் தமிழில் சமூக இயக்கத்தின் அடிப்படைகளை வரலாற்று நோக்குடன் சிந்திக்க விரும்பும் எவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

நன்றி: உயிர்மை வெளியீடு - டிசம்பர் 2006



'பெருஞ்சுவருக்குப் பின்னே' ( சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும் )
நூலாசிரியர் -ஜெயந்தி சங்கர்

. விலை120

கிடைக்குமிடம் :
திரு. மனுஷ்ய புத்திரன்,
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,

Tele/Fax : 91-44-2493448, residence:91-44-52074030, Mobile : 9444366704

நூல் அறிமுகம் - - செல்வநாயகி

சீனாவிலும் பெண்கள் இப்படித்தான்... ஜெயந்தி சங்கரின் நூலும் என் எண்ண இடைச்செருகல்களும்





மரங்கள் வழமைபோல் கோடையைச் சூடிக்கொண்டு விட்டன. இம்மாதங்களில் மட்டும் பறந்து திரியும் குருவிகள் சிலவும் வருடம் போலவே வந்து வந்து சன்னலுக்கருகில் சத்தமெழுப்பியே போகின்றன. எல்லாம் இருந்தும் இந்தக் கோடை பசுமையைக் கொண்டாடும் மனநிலையை வாரி வழங்கியதாகத் தெரியவில்லை. சில மாதங்களாய்ப் பதைபதைப்புடனும், இன்னபிற கையாலாகத் தனங்களோடும் செய்திகளை மட்டும் வாசித்துக் கடைசியில் இன்னும் மோசமான உணர்வுகளுக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கும் தமிழர்களில் ஒருத்தியாக நானும். எப்போதாவது தொலைதூர ஈழத்து நண்பர்கள், தோழிகளிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளில் கூட என்ன பேசுவதெனத் தெரியாத தடுமாற்றங்களே எஞ்சுகின்றன. இலக்கியம், கவிதை, ஈரம், நேசம், மனிதாபிமானம், உயிராபிமானம், லொட்டு, லொசுக்குஇன்னபிறவெல்லாம் எழுதவும், படிக்கவும் சுவைகூட்டுகின்றனவேயொழிய நடைமுறையில் எவ்வளவு தூரம் சாதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்து உலகம் முழுமையும் வெறுமையால் சூழப்பட்டதான காட்சியைச் சில கணங்களில் விரித்துப் பின் தன்னுள் சுருங்குகிறது. இருந்தும் எழுதவே செய்கிறோம். ஏனென்றால் எழுத்து சில சமயம் ஆத்மதிருப்தியைத் தருகிறது. உள்ளே உருண்டு புரளும் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கிறது. எழுத்தை அருந்திப் பழகியவருக்கு அது ஒரு போதையாகக்கூடப் போய்விடுகிறது. ஒருசில நேரம் நம் இருத்தலுக்கான அச்சுறுத்தல்களுக்கு ஒரு எதிர்ப்பாகவும் எழுத்தை ஏந்தலாம்.


எழுத்துக் குறித்து மேற்சொன்ன எண்ணங்களெல்லாம் இருந்தாலும் நாளைத் தொடங்குகிற போது வாசிக்கிற செய்திகளும் பிறகு அவை தருகிற உணர்வுகளின் அலைக்கழிப்பிலும் உழலும் மனதை வைத்துக் கொண்டு எழுதும் எதிலும் உருப்படியாகச் சொல்ல முடிந்ததும் ஒன்றுமில்லையென்றே தோன்றுகிறது. இந்த ஒழுங்கற்ற நாட்களுக்கு நடுவே புத்தகம் படிக்கலாமென்ற எண்ணம் தோன்றியது. கி.மு, கி.பி மாதிரி புத்தக நேசத்தின் அடர்த்தியைக் க.மு (கணினிக்கு வரும் முன்), க.பி (கணினிக்கு வந்த பின்) என்ற கால வரையறை கொண்டே அளக்க வேண்டியிருக்கிறது. க.பி அந்த நேசத்தை ஒரு அடர்ந்த இருட்டுக்குள் தள்ளி விட்டது போலவே இருக்கிறது. ஊரிலிருந்து உறவினர்களால் அன்போடு கொடுக்கப்பட்ட வடக வகைகளையெல்லாம்கூட இரக்கமின்றிப் புறக்கணித்துப் பெட்டி நிறைய எடுத்து வந்த புத்தகங்கள் இங்கே தூசியோடு பேசிக் கொண்டு வருந்துவதைப் பார்க்கும்போது நிச்சயமாய் ஒரு சுய சுத்திகரிப்பு செய்தாக வேண்டுமென்றே படுகிறது. வலிந்து நாளிடமிருந்து நேரத்தைப் பிடுங்கிக் கொண்டு புத்தகமொன்று தேடிய போது ஜெயந்தி சங்கரின் "பெருஞ்சுவருக்குப் பின்னே" கைகளில் அகப்பட்டது. அது வெளியிடப்பட்டதும் ஜெயந்தியால் அனுப்பி வைக்கப்பட்டு இரு வருடங்களுக்கு முன்பே ஒருமுறை வாசித்து விட்டிருந்தேன். என்றாலும் மீண்டும் வாசித்தேன்.

இணையத்தில் 2003 வாக்கிலேயே குடிபுகுந்தவர்களுக்கு ஜெயந்தி சங்கரை நன்கு பரிச்சயமிருக்கலாம். அப்போதிருந்த மிகச் சில பெண் பதிவர்களில் அவரும் ஒருவர். சிறுகதைகள், குறுநாவல், நாவல், கட்டுரைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என இது வரை பல நூல்களை வெளியிட்டிருக்கும் இவரின் படைப்புகளில் என் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தது "பெருஞ்சுவருக்குப் பின்னே" நூல். சிங்கப்பூர்வாசியான ஜெயந்திக்கு அங்கே சீனர்களின் மொழி, வாழ்வியல், வரலாறு குறித்த ஆர்வமும், தேடலும் ஏற்பட்டதே இந்நூலுக்கு வித்திட்டிருக்கிறது. இந்தநூல் முழுதும் சீன வரலாற்றில் பெண்களின் நிலை குறித்த ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார்.

தோற்றங்கள், தோல்நிறம், மொழி, இடம், இனம் மாறினாலும் 'பெண்" என்னும் சொல்லின் வரையறை எந்த ஒரு வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. எல்லா இடங்களிலும் அவளுக்கான வரையறை "ஆணுக்குக் கட்டுப்பட்டு, ஆனுக்காக வாழ்" என்பதே. கட்டப்பட்டிருந்த நூல்களும், அடைக்கப்பட்டிருந்த சிறைகளும் வண்ணங்களால் வேறுபட்டிருந்தாலும் "அடிமைத் தத்துவம்" காக்கப்பட்டே வந்திருக்கிறது. சீனப் பெண்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியுமா என்ன? நீண்டு நிற்கும் பெருஞ்சுவர் சீனாவுக்கான அடையாளம். அந்தப் பெருஞ்சுவருக்குப் பின்னான பெண்களின் இருண்ட வாழ்வு குறித்துப் பேசுகிறது இந்நூல்.

சீனப்பெண் சிறு அறிமுகம் என்பது தொடங்கி, மதங்களால் உருவாக்கப்பட்ட பெண், பெண்களுக்கான சமூகப்பாடங்கள், மரணித்த பாதங்கள் இலக்கியத்தில், அரசியலில், கல்வியில், தற்காலத்தில் சீனப்பெண்களின் பரிமாணங்கள், புலம்பெயர்நாடுகளில் அவர்களின் வாழ்வியல், சாதனைகளில் சீனப்பெண்கள் எனக் கிட்டத்தட்ட 40 தலைப்புகளில் மிகுந்த நுணுக்கங்களோடும், உண்மைகளோடும், அக்கறையோடும் எழுதப்பட்டிருக்கிறது.

"திறமையற்ற பெண் தான் நற்குணமுடையவள்", "மகள்களை வளர்ப்பதை விட வாத்துக்களை வளர்ப்பது மேல்" போன்ற சீனப் பழமொழிகளிலும், "பெண்ணாயிருப்பது எத்தனை வருந்தத்தக்கது!! பூமியில் வேறெதுவும் இத்தனை கீழ்த்தரமில்லை, ஆண்கள் வாயிற்கதவில் சாய்ந்துநிற்பது சொர்க்கத்திலிருந்து தெய்வங்கள் வீழ்ந்தது போல், நான்கு கடல்களையும் வீரத்துடன் எதிர்கொள்வான், ஆயிரம் மைலகளுக்கு காற்றையும் தூசியையும்கூட, பெண்பிறந்தால் யாருக்கும் பிடிக்காது" என்று தொடங்கும் சீனப்பழங்கவிதையொன்றிலும் ஆரம்பித்திருக்கிறார் ஜெயந்தி சீனப்பெண்களுக்கான அறிமுகத்தை. அங்கும் தந்தை வழிச்சமூகம் ஆரம்பித்த காலத்தே தான் பென்ணடிமைத்தனம் தன் வேர்களைத் திறம்பட ஊன்ற ஆரம்பித்திருக்கிறது. தாவோவும், பௌத்தமும் கொண்டிருந்த பெண் மீதான அணுகுமுறை மற்றும் முடியாட்சிக் கால நிலை என எங்கும் பெண்ணுக்கு இருண்ட காலமே.

உலகம் போற்றும் தத்துவஞானி கன்பூசியஸ¤க்கும் கூடப் பெண் கடைநிலைதான் என்பது வருந்தத்தக்கதெனினும் அதிர்ச்சியளிக்கவில்லை. ஏனென்றால் இங்கே பிதாமகன்கள் என்று பேசப்படுகிற பல கொம்பர்களுக்கும் கூடப் பெண் அவர்களுக்கான ஒரு சேவகி மட்டுமே என்பது வரலாற்று உண்மை. ஆண் கன்பூசியஸை விட்டுப் பெண் கன்பூசியஸ் என்று கொண்டாடப்பட்ட சீனப் பெண் அறிஞர் பான் ஜாவ் பெண்களுக்கு என்ன சொன்னார் என்று பார்த்தாலுமே நம்முடைய "தையல் சொல் கேளேல்" பாணியாக இருக்கிறது. அச்சம், மடம், நாணப் பாடங்களைத்தான் பான் ஜாவும் எடுத்துத் தொலைக்க வேண்டிய சிந்தனை அவலத்தை அச்சமூகம் ஊட்டி வளர்த்திருக்கிறது.

ஆணுக்காக வார்க்கப்பட்ட பெண்களைச் சீனச் சமூகத்திலும் கண்டறிந்து பல்வேறு பழக்கவழக்கங்கள், வரதட்சணை, குடும்ப நிகழ்வுகள் எனப்பலவற்றையும் விட்டுவிடாது விளக்கியிருக்கிறார் ஜெய்ந்தி. என்னை மிகவும் பாதித்த அங்கத்தைய பழக்கம் ஒன்று "மரணித்த பாதங்கள்" என்ற தலைப்பில் கட்டுரையாக்கப்பட்டிருக்கிறது. "பெண்ணின் உடலும் ஆணுடையதே" என்ற சமன்பாட்டைப் பலசமூகங்களும் நிறுவியே வந்திருக்கிறது. பழஞ்சீனச் சமூகத்தில் பெண்ணின் பாதங்கள் ஆணுக்கு இச்சையைத் தூண்டுவதாகவும், அவன் அழகின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் அவன் எதிர்பார்க்கும் அளவுகளில் சிறியதாக இருக்கவேண்டுமாம். அதற்காகப் பெண்கள் பாதங்களை இறுக்கி, மடக்கிக் கட்டிக் கொள்வார்களாம் அதன் வளர்ச்சியைத் தடுக்க. இது வேறு ஒரு சடங்காக நடத்தப்படுமாம். முதலில் கால்விரல் நகங்கள் வெட்டப்பட்டுப் பின் எலும்பையும், தசையையும் மென்மையாக்க மூலிகை காய்ச்சிய சுடுநீரில் காலை ஊறவைத்துக் கடைசியில் கட்டைவிரலை மட்டும் விட்டு மீதி விரல்களையெல்லாம் உள்ளே தள்ளி இறுக்கிக் கட்டிவிடுவார்களாம். அப்படிக் கட்டிய பாதங்களோடே சில வருடங்கள் நடந்தால் பாத வளர்ச்சி தடுக்கப்பட்டுச் சிறியதாகவே இருக்குமாம். இவ்வளவு பெரிய வன்முறை 20ம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இருந்துவந்துள்ளது என்பது உபகுறிப்பு. இப்படியெல்லாம் ஒருவனுக்காகச் சிரமப்பட்டுச் சிறிய பாதங்கள் கொண்டு கல்யாணம் கட்டித்தான் தொலைக்க வேண்டுமா என்றால் "செத்த பின் அவளின் கல்லறையைப் பராமரிக்க கணவனோ, வாரிசுகளோ இல்லாது போனால் அவள் மோட்சம் அடைய முடியாது" என்பது இன்னொரு எழவெடுத்த நம்பிக்கையாம். உண்மையில் இந்தக் கட்டுரையை இரண்டாவது முறையாக வாசிக்கும் போதும் நான் உணர்ச்சி வயப்பட்டேன். நம்மை மாதிரி ஆட்கள் அங்கே பிறந்து தொலைந்திருந்தால் நிச்சயமாக மோட்சமே கிடைத்திருக்காதே என்ற எண்ணமும் வந்துபோனது.

ஆனால் பெரும் இடிகளுக்கு நடுவிலும் சின்ன மழையொன்று சிதறி விழுவதைப் போல் இத்தனை இடர்ப்பாடுகள் நிறைந்த சமூக அமைப்பிலும் தடைகளைத் தாண்டிச் சாதித்த பெண்களும் உண்டுதான். அப்படி வெளிப்பட்ட முதல் சீனப்பெண் விமானி உள்ளிட்ட இன்னும் சில முதல் பெண் வகையராக்களையும், சமீபத்திய சட்ட, சமூக மாற்றங்களையும் கூடக் கோடிட்டுக் காட்டிச் சில நம்பிக்கைகளையும் விதைத்து முடிகிறது நூல்.

எனக்கு இந்நூல் சொல்லியவை ஏராளம். அவ்வகையில் இதை ஒரு படிக்க வேண்டிய நூல் என்பேன். புத்தகம் குறித்து முதல்முறை வாசித்த போதே தனிப்பட்ட முறையில் என் நண்பர்களுக்குப் பரிந்துரைத்தேன் எனினும் அது குறித்து இங்கே எழுத நினைக்கையில் சில தயக்கங்கள் இருந்தன. அதில் முக்கியமானது ஜெயந்தி என் நண்பர் என்பது. எனது கருத்துத் தளங்கள் சிலவோடு ஜெயந்திக்கு இடைவெளிகள் இருக்கலாம், என்றாலும் இணையத்தில் நான் நெருங்கிப் பேசும் சுகமான சொற்ப நட்புகளில் அவர் இருக்கிறார். நண்பர்களின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எழுதுவதில் சில அகவயப்பாட்டுச் சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்று வெறும் சொரிதலாய் முடிந்துவிடக்கூடும் என்பது. ஆனால் இரண்டாவது முறையாகவும் வாசித்த பின்பு ஜெயந்தியை மறந்து அந்தப்பிரதி தனக்குள் மட்டும் என்னை வைத்திருந்தது. எனவே எழுத நினைத்தேன்.

இப்போதும் ஜெயந்திக்கு இந்தப் பிரதியின் வாசகியாக மட்டும் சொல்ல நினைப்பது "சிந்திக்கிற, எழுத விரும்புகிற எல்லாப் பெண்களும் தாம் நினைக்கும் தூரம் வரை வந்து சேர்ந்துவிடுவதில்லை. இடையில் வீடு இழுத்து விடுகிற, சமூகச் சேறு விழுங்கி விடுகிற சோகங்கள் உண்டு. எல்லாம் தாண்டி வந்த பின்னும் எத்தனை பேருக்கு உண்மையான சமூக அக்கறை இருக்க முடியும் என்பதும் சொல்வதற்கில்லை. விகடனிலும், குமுதத்திலும் ஒரு காதல் அல்லது சாதல் கதை வந்த கையோடு அந்த வெளிச்சத்திலேயே தன் ஆயுளைக் கரைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. அப்படியின்றி எழுதக் கிடைத்த வாய்ப்பை சமூக நேசத்தின்பாலும் செலுத்த முடிவது சிறப்பானது. நீங்கள் பெருஞ்சுவருக்குப் பின்னே எழுத நினைத்ததில் அப்படியொரு நேசம் நிறைந்திருக்க வேண்டும் என்பதே என் கணிப்பு. அதை நீங்கள் தொடர வேண்டும். இரண்டாவது நானறிந்த வரை தற்கால சமூக நிகழ்வுகளில் அது பெண் சம்பந்தப்பட்டதே எனினும் ஒரு எழுத்தாளராக அல்லது பெண் எழுத்தாளராக உங்களின் குரலை நான் கேட்டதில்லை. கேட்க விரும்புகிறேன். சீனப் பெருஞ்சுவரையும் தாண்டி விடயங்கள் சேகரிக்கும் ஜெயந்தியின் எழுத்து மனம் மற்ற தேவையான நேரங்களிலும், இடங்களிலும் கூடத் தன் மௌனம் உடைத்து வெளிவர வேண்டும் அதன் சாதக பாதகங்கள் பற்றிய பிரக்ஞைகள் இன்றி.



'பெருஞ்சுவருக்குப் பின்னே' ( சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும் )
நூலாசிரியர் -ஜெயந்தி சங்கர்


உயிர்மை வெளியீடு - டிசம்பர் 2006

கிடைக்குமிடம் :
திரு. மனுஷ்ய புத்திரன்,
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,

Tele/Fax : 91-44-2493448, residence:91-44-52074030, Mobile : 9444366704

'பெருஞ்சுவருக்குப் பின்னே' - நூல் அறிமுகம் -- மதுமிதா

ஜெயந்தி சங்கரின் 'பெருஞ்சுவருக்குப் பின்னே' நூலின் தலைப்பே சீனப்பெருஞ்சுவரினை நினைவுபடுத்துவதோடு பெருஞ்சுவருக்குப் பின்னே நிகழ்ந்திருப்பது என்ன என்ன என்பதை வாசித்தறியும் ஆர்வத்தினை தூண்டுவதாகவும் உள்ளது.


'சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்' எனும் சிறு தலைப்பு நூலின் சாரம்சம் இதுதான் என்பதனை கோடிட்டுக் காட்டி விடுகிறது. பெண்களின் வாழ்க்கையே சுவருக்குப் பின்னேயான வாழ்க்கையாய் அடைபட்டு விடுவதை சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் அப்பட்டமாக அப்படியே காட்டப்பட்டுள்ளது.


சீனப் பெண்களின் வாழ்க்கைநிலை குறித்து தமிழுக்கு முற்றிலும் புதுமையானதொரு நூல் இது. ஜெயந்தி சங்கரின் இந்நூல் உயிர்மை வெளியீடாக 192 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 37 தலைப்புகளில் நூலாசிரியர் கட்டுரைகளை அளித்துள்ளார்.
கட்டுரைகள் அனைத்தையும் மெனக்கெட்டு தன்னார்வத்துடன் ஆய்வுரீதியில் கொடுத்துள்ளார். எனினும் மொழிபெயர்ப்புநூலாகத் தெரிவதனை தவிர்க்க இயலவில்லை. நம் சூழலுக்கு முற்றிலும் புதிதான ஒரு படைப்பாகையால் இப்படித் தோன்றுவதனை தவிர்க்கவியலவில்லை. அனைத்தையும் மீறி அவரின் கடின உழைப்பும் அக்கறையும் தெரிகிறது.




நூலாசிரியரின் முன்னுரையில் சொல்லும் இவ்வரிகளே அவரின் ஆய்வுக்குக் கட்டியம் கூறும் - 'வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பல வாரங்களுக்கு இது ஒன்றையே செய்து கொண்டிருந்தேன். தேசிய நூலகத்தின் குறிப்பெடுக்கும் பிரிவில் வாரா வாரம் சில மணி நேரங்கள் செலவழித்து எடுத்த குறிப்புகளைக் கொண்டு பல மணி நேரங்கள் கணினியில் எழுதினேன். இது தவிர, இணையமும் கைகொடுத்தது. சில வருடங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து வந்து இங்கு வசிக்கும் தோழி ஸேராவிடமும் அவர்களின் தோழிகளிடமும் எழுதியதை அவ்வந்த வாரமே கலந்து பேசி சரி பார்த்துக் கொண்டேன். ஒரு சில விவரங்களில் அவர்களுக்கே சந்தேகம் வந்தது.'
முதல் அத்தியாயத்திலேயே முகத்திலறையும் உண்மை வெளிப்பட ஆரம்பிக்கிறது.
'ஒரு பெண்ணைக் குறிக்கும் சீனத்தின் சித்திர எழுத்தில்பணிவுடன் மண்டியிட்டிருக்கும் பெண்தான் சித்தரிக்கப்படுகிறாள். மணமான பெண்ணைக் குறிக்கும் சீன எழுத்து இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளாது. ஒன்று துடைப்பம்; இன்னொன்று ஒரு பெண். அதன் உச்சரிப்பு - ஷ¥வென் ஜெயிட்சு. இதற்கு அகராதி கொடுக்கும் விளக்கம் 'கீழ்ப்படிதல் மற்றும் பெண் தரையைக் கூட்டுதல்' என்று இருவேறு பொருள்கள். எழுத்து வடிவம் வருவதற்கு முன்பே சீனத்தில் ஆணாதிக்கச் சிந்தனைக்கு விதை போட்டாகி விட்டது என்பதற்கு இதுவும் நல்ல ஒரு சான்று'
என்று கொடுத்துள்ளார்.


தொடர்ந்து 'திறமையற்ற ஒரு பெண்தான் நற்குணமுடையவள்' மற்றும் 'மகள்களை வளர்ப்பதைவிட வாத்துகளை வளர்ப்பது இன்னும் லாபகரமானது' போன்ற சீன பழமொழிகள் சீனப் பெண்களின் நிலையினை தெளிவாகவே சொல்கின்றன.
'நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா' என்ற பாடல்தான் கேட்டுள்ளோம். வாழ்க்கையில் நன்றிகெட்ட மகனால் மனதிலடிபட்ட தந்தையின் மன உணர்வு அது. மகளை வளர்ப்பதைவிட வாத்தை வளர்ப்பது லாபகரமானதா வாசிக்கையிலேயே வலிக்கிறது.


சமீப வருடங்களுக்கு முன்னால்வரை எந்தக் காலக்கட்டத்திலும் அரசு வேலைகளில் பெண் அனுமதிக்கப்பட்டதில்லை. அவளுக்கு வீடு மட்டுமே உலகம் என்று வகுக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண் வெளியில் செல்வது பிள்ளைப்பேறு தொடர்பாகவும், வேறுவகைப்பெண்கள் ஆணின் சௌகரியம் கருதி மட்டுமே. வாழ்நாள் முழுவதுமான உடல் மற்றும் மனவலிதான் பழஞ்சீனப்பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிறந்ததிலிருந்தே இவ்வகையான வாழ்வு முறைக்குத் தயார்படுத்தப்பட்டே வந்திருக்கிறாள்.


இரண்டாம் அத்தியாயத்தில் பெண் குறித்த சீனப்பழங்கவிதை:
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த •பூ ஷ¤வான் என்ற சீனப் பெண் கவிஞரின் 'பெண்' என்ற கவிதையை ந்யூயார்க்கைச் சேர்ந்த ஆர்தர் வேய்லி என்பவர் 1946ல் மொழிபெயர்த்தார். அதன் ஒரு பகுதியின் எளிய தமிழாக்கம் -


பெண்ணாயிருப்பது எத்தனை வருந்தத் தக்கது ! !
பூமியில் வேறு எதுவும் இத்தனை கீழ்த்தரமில்லை
ஆண்கள் வாயிற்கதவில் சாய்ந்து நிற்பது
சொர்க்கத்திலிருந்து தெய்வங்கள் வீழ்ந்தது போல்.
நான்கு கடல்களையும் வீரத்துடன் எதிர்கொள்வான்
ஆயிரம் மைல்களுக்கு காற்றையும் தூசியையும் கூட.
பெண் பிறந்தால் யாருக்கும் பிடிக்காது
அவளை அவள் குடும்பத்தினருக்கும்.
அவள் வளர்ந்ததும் அறையில் ஒளிந்து கொள்வாள்
ஓர் ஆணை முகத்திற்கு நேராகப் பார்க்க பயந்து.
யாரும் அழுவதில்லை அவள் வீட்டை விட்டுச் செல்லும் போது-
சட்டென்று மழை நின்று மேகங்கள் தெரிவதைப் போல
அவள் தலை குனிந்து தன்னைத் திடப் படுத்திக் கொள்வாள்.
சிவந்த உதடுகளைக் கடிக்கும் அவளின் பற்கள்,
பணிவாகப் பலமுறை குனிந்தும் மண்டியிட்டும்
வேலைக் காரர்களையும் வணங்குதல் வேண்டும் அவள்
அவனின் அன்பு வானத்து நட்சத்திரங்களைப் போல தூரத்தில்
இருந்தாலும், சூரியகாந்தி சூரியனை நோக்கிச் சாயும்.
இருவரின் உள்ளமும் நீரும் நெருப்பும் போன்ற எதிர் நிலையில்
நூறு இன்னல்கள் கவிழும் அவளின் மீது.
அவளின் முகம் வருடங்களின் மாற்றங்களையடைய
அவள் தலைவனோ விதவிதமான சுகங்களைத் தேடிய படி.
அப்படியே வாசிக்க வாசிக்க அப்பெண் கடந்து செல்ல வேண்டிய இன்னல்கள் கண்முன்னே தெரிகின்றன காட்சிகளாய்.


தொடரும் அத்தியாயங்களில் முழுமையான சீனப்பெண்கள் குறித்த வரலாறு சீனத்தின் வரலாறாகவே காணக் கிடைக்கிறது. மதம், முடியாட்சி, சித்திரஎழுத்து, பெண்மொழி, அரசிகள், வீரப்பெண்கள், ஆசைநாயகிகள், அழகிகள், குரூபிகள், இலக்கியத்தில், அரசியலில் பெண்கள், பெண்கல்வி, குடும்பம், சிசுக்கொலை, வரதட்சிணை, திருமணம்.......... என பல்வேறு தலைப்புகளில் பெண்களின் பல்வேறு வாழ்க்கை நிலையினைக் கொடுத்துள்ளார்.


பெண்களின் பாதங்களைக் கட்டும் 'மரணித்த பாதங்கள்' வாசிக்கையில் மரத்துப்போகிறது மனம்.


உலகளவில் பெண் சிசுக்கொலை பிரபலம் போலிருக்கிறது. இங்கே உசிலம்பட்டியில் மட்டுமே என்று இனி வருந்த வேண்டாமோ? சீனாவிலும் பெண் சிசுக்களுக்கு உயிரின் மீதான பாதுகாப்பில்லை.


1996 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சீனாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 10,000 பெண்குழந்தைகள் கொல்லப்படுவதாகத்தெரிகின்றன. என்ன நெஞ்சு கொதிக்கிறதா. அடங்கலாம் என்று இந்தப் பாடலை வாசித்தால் இன்னும் எகிறுகிறது.
'பாடல்களின் நூல்' என்ற 1000 - 700 கிமு வைச் சேர்ந்த பழஞ்சீன இலக்கியத்தில் உள்ள


மகன் பிறந்தால்
அவனைப் படுக்கையின் மீது தூங்க வை
அவனுக்கு உயரிய உடைகளை அணிவி
அவனுக்கு விளையாட பச்சைப் பவழத்தைக் கொடு
மகள் பிறந்தால்
அவள் தரையில் உறங்கட்டும்
கந்தலைக் கொண்டு அவளைப் போர்த்து
உடைந்த பீங்கானை விளையாடக் கொடு



1947 ல் 'ஒரே குழந்தை' கொள்கை அறிமுகப் படுத்தப்பட்டபின் சீனப்பெண்கள் அடிக்கடி காணாமல் போகிறார்களாம். ஒரு குழந்தைக்கு மேல் உருவான கருவைக் கலைக்கவோ, பெற்றெடுத்துவிட்டு மேலை நாட்டினருக்குத் தத்து கொடுக்கவோ பெண்களுக்கு அவகாசம் தேவையாக இருந்தது. அதனால், குறிப்பிட்ட காலத்துக்கு இப்பெண்கள் காணாமல் போனார்கள். ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், ஊதியத்தில் வெட்டு விழுந்தது. அரசாங்கத்தால் ஓய்வூதியம் குறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்தது. இன்னும் சில வருடங்களில் 40 முதல் 60 மில்லியன் பெண்கள் கணக்கில் வராமல் காணாமல் போகலாம் என்கிறார்கள் மக்கட் தொகையியல் வல்லுநர்கள். இந்த வரிகளை எழுதும் போது ஜெயந்தி எப்படியெல்லாம் வேதனைப்பட்டாரோ என்றெண்னுகையில் இதையும் மீறும் வண்ணமாய் பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை, திருமண சிக்கல் குறித்த சில கட்டுரைகள் வருகின்றன. வாசிக்கையில் வாசிக்கையிலேயே இத்துனை துன்பம் என்றால் வாழ்ந்த பெண்களின் நிலை என்ற கேள்விக்குறி பெரிதாய் தோன்றுகிறது.
சட்டத்தின் பெயரால் பெண்கள் சிறையிலும், காவலிலும் அடைந்த கொடுமை ரத்தக்கண்ணீர் வரச்செய்யும்.


சீனத்தில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் சீனப்பெண்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். அதில் 1,50,000 பேர் சாகிறார்கள். கிராமப்புறங்களில் நகரங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு சீனப்பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 70-80 சதவிகிதம் கணவன் மனைவி சண்டையால் விளைந்தவையாம்.


மணவிலக்குகள் அதிகரித்துவிட்ட நிலையில் போலி மணவிலக்கு குறித்து சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாயுள்ளது. சர்வ சாதாரணமான போலிமணவிலக்குகள் நிஜமான மனவிலக்குகளுக்கு தம்பதியினரிடையே உண்மையான பிளவுக்கு காரணமாகிவிடுகிறதாம்.


புலம் பெயர் நாடுகளில் சீனப்பெண்களின் நிலையினைக் காணும்போது உலகம் முழுக்க பெண்களின் நிலை இதுதானோ, அது எந்த தேசத்து, இனத்துப் பெண்ணாக இருந்தாலும் என்னும் நிலை தீவிர யோசனையைக் கிளப்புகிறது. பாலியல் ரீதியான சிரமங்கள்தான் எத்தனை எத்தனை.


ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் தென்கிழக்காசிய வட்டாரத்தில் சீனப்பெண்களே ஜப்பானிய இராணுவத்தினரின் உடற்தேவைகளுக்கு அதிகமாக இலக்கானார்கள். ஏராளமான பெண்கள் ஊரை விட்டுத்தள்ளி ஒதுக்குப்புறமாக அமைக்கப்பெற்ற வீடுகளில் சிறை வைக்கப்பட்டார்கள். இவ்வகையில் சிறைப்படுத்தப்பட்ட மொத்தப் பெண்களில் 80 சதவிகிதம் பேர் சீனப்பெண்கள்.


சீனப்பெண்களின் உடையில் மாற்றம் வரவேண்டுமென்றும், சீனப்பெண்ணுக்கு உடையின் அசௌகரியமாக இருக்கும் என்று அக்கறை கொண்ட ஒரு கவிஞரின் கவிதை இதோ:


ஒரு சீனப் பெண் வியாபாரியைக் கேளுங்கள்
சீனப்பாணியில் உடை உடுத்த வேண்டுமா என்று,...
எத்தனை சிரமம் இந்த வியாபாரப் பெண்களுக்கு
அவர்கள் அழகிய பருத்தித் துணிகளும் பட்டுத் துணிகளும் விற்கிறார்கள்.
ஒரு கையில் துணிப் பொதியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
இன்னொரு கையில் குடையையும் எடுத்துக் கொண்டால்
இன்னும் சிரமமாக இருக்காது?


இத்தனையும் கடந்தும் பல பெண்கள் அரசியலில், இலக்கியத்தில், இராணுவத்தில் பல்வேறு துறைகளிலும் முன்னுக்கு வந்துள்ளனர். தன்னம்பிக்கையுடன் போராடி வென்ற பெண்களாகவும் காட்சியளிக்கின்றனர்.

ச்யூ ஜின் (1877-1907) மட்டுமே 1906 ல் பெண்களுக்கான பத்திரிகையைத் தொடங்கியவர். பாடல்களும், கவிதைகளும் எழுதியுள்ளார். ஷாங்குவான், லீ பாய் கவிஞர்கள். ஷன் சுங்க் இலக்கிய வரலாறு ஆளுமை மிக்கவர். ஜீத்தியேன்( கி.மு. 221) கவிஞர். யாங்க் யூஹ¥வான் ஆடல், பாடல்களில் வல்லவர்.

ஷ்வே தாவ் ( கி.பி. 758 - 832) கவிஞர் பாடகி. ஸ்யேதாவ்யுன் கவிஞர், கட்டுரையாளர். லியூ லிங்க் ஸியன் கவிஞர்(கி.பி. 502 - 557). லீச்சிங்க் ஜாவ் கவிஞர், கட்டுரையாளர், பாடலாசிரியர் (கி.பி. 1084 - 1155). ஷீமூ கவிஞர், நாட்டுப்பற்றாளர்.

ஸின்ரன் - இவரின் 'சீனாவின் நல்ல பெண்மணிகள்' நூல் 50 நாடுகளில் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

'வீரப்பெண்கள்' நெஞ்சுரம் பெற்ற வீர மகளிர்களைக் குறித்த கட்டுரை. சீனப்பெண்களின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்த எண்ணற்ற பெண்களைச் சீன வரலாறு நெடுகிலும் சந்திக்க இயலுகிறது.

'நவீன சீனத்தில் பெண்களின் நிலை' மனதை ஆற்றுப்படுத்துவதாய் உள்ளது. அனைத்துத்துறைகளிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெல்லும் மகளிரின் மாண்பு சீனப்பெண்களிடமும் காணக்கிடைக்கிறது.

இன்றைய சாதனைப்பெண்களில் சிலர் என்ற அத்தியாயம் (இதுவே கடைசி அத்தியாயம்) 8 பெண்கள் குறித்த கட்டுரை அடங்கியது. விமானி, நிறுவனர், செஸ், கம்பூட்டர் சாதனையாளர் என பலதுறைப்பெண்கள் குறித்து பேசுகிறது இவ்வத்தியாயம்.

'பெருஞ்சுவருக்குப் பின்னே' சீன பெண்கள் குறித்த நுட்பமான பார்வைக்கான திறவுகோல்.


----


'பெருஞ்சுவருக்குப் பின்னே' ( சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும் )
நூலாசிரியர் -ஜெயந்தி சங்கர்


உயிர்மை வெளியீடு - டிசம்பர் 2006

கிடைக்குமிடம் :
திரு. மனுஷ்ய புத்திரன்,
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,

Tele/Fax : 91-44-2493448, residence:91-44-52074030, Mobile : 9444366704

Tuesday, April 06, 2010

ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்

-- புதியமாதவி



அண்மையில் (2006) சிங்கையிலிருந்து ஜெயந்தி சங்கர் எழுதி வெளியிட்டிருக்கும் மூன்று புத்தகங்கள் என்னைத் தேடி வந்தன. (நாலே கால் டாலர் -16 சிறுகதைகள், முடிவிலும் ஒன்று தொடரலாம் - மூன்று குறுநாவல்களின் தொகுப்பு,ஏழாம் சுவை - 11கட்டுரைகள்),எவ்விதமான சின்னத் துண்டு கடிதமும் இணைக்கப்படாமல். எப்படி முகவரி கிடைத்திருக்கும் என்று வழக்கமான துப்பறிதலை விலக்கி வைத்து விட்டு புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தால் ஒன்றிலிருந்து ஒன்றாக மூன்று புத்தகங்களையும் ஒருசேர வாசிக்க வைத்த எழுத்தின் ஆளுமையும் ஜெயந்தி கதை மாந்தர்களும் என் கண்ணாடிக் கதவுகளில் பளிச்சிட்டு மின்னும் மும்பையின் மழை மேக மின்னலைப் போல மின்னி கொட்டி நனைத்து இருப்பதை நானே புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்தது உண்மை.


ஜெயந்திசங்கரின் கதைகள் பலவற்றை மின்னிதழ்களில் தொடர்ந்து வாசிக்கும் வாசக அனுபவம் ஏற்கனவே இருந்தாலும் ஒருசேர வாசிக்கும்போது தான் ஏழாம் சுவையை அனுபவிக்க முடிகிறது. கதை மாந்தர்களிடமிருந்து விலகி நிற்காமல் அதே நேரத்தில் அவர்களின் உணர்வுகளில் கலந்து அதிகப்படியாக அழாமல், கூச்சலிடமால ரொம்பவும் சர்வ சாதாரணமாக கதைகளை நகர்த்திச் செல்வது தான் ஜெயந்தியின் கதைச் சொல்லும் பாணியாக அமைந்துள்ளது.


கதைகளும் கதை மாந்தர்களும் பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலேயே இருப்பதால் ஜெயந்தியின் கதை மாந்தர்களின் நிஜமுகம் அலங்காரங்கள் இன்றி அன்றாடம் சந்திக்கும் பெண்களாக அமைந்து விடுகிறார்கள். சிங்கையும் சிங்கையின் புலம்பெயர்ந்த வாழ்வும் அந்த வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளும் கதையின் கருப்பொருளாகி ஜெயந்தியின் கதைகளைத் தனித்துவமாக்கி சிறப்பு செய்கின்றன.

சட்டமும் ஒழுங்கும் மனித நேயத்தைக் கொன்றுவிட்டு என்ன சாதிக்க முடியும் என்பதை மிகவும் நேர்த்தியாக படைத்திருக்கும் கதை "ஈரம்" . கதையின் முடிவில் மகன் மகிழ்ச்சியுடன் வந்துடும்மா என்று சொல்வதை எதிர்பார்ப்பவளுக்கு ஏமாற்றம். மகன் சொல்கிறான்.'எடுத்ததுமே, ஏம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு திடீர்னு கிளம்பி இங்க வரேன்ற?' கதை முடிகிறது நாம் அப்போதுதான் இன்னும் ஆழாமாக யோசிக்க ஆரம்பிக்கின்றோம்

வாழ்க்கையின் பொருளியல் தேவைகள் முன்னிறுத்தப்படும்போது தாயன்பு, மனித நேயம் எல்லாமே இரண்டாவது, மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படுவதை. சிங்கையின் சட்டம் ஒழுங்கான சமுதாயம், இந்திய வாழ்வின் பொருளியல் தேடலின் அவலம் இரண்டையும் ஒரு சேர ஒரே கதையில் -ஒரு கல்லில் இரண்டு

மாங்காய்' அடித்த மாதிரி சாதித்திருக்கிறார் ஜெயந்தி.


திரிசங்கு கதை முழுக்க முழுக்க ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் கதை. கதை முழுக்கவும் சிறுவனின் மனநிலையில் அவனுடைய வயதுக்கு ஏற்ற வார்த்தைகளுடன் எவ்விடத்திலும் அதை மீறாமல் எழுதப்பட்டிருக்கும் கதை. பாலர் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுகள் என்றாகிவிட்ட போட்டிகள் நிறைந்த உலகத்தை புதிய முறையில் சொல்லும் கதை பந்தயக்குதிரை.

மிருகன் என்ற கதையும் கதைக்கருவும் எவரும் தொடாத செய்தி. பல இடங்களில் பத்திரிகைகள் வாயிலாக இப்படிப்பட்ட மிருகங்களும் மனித வடிவில் நடமாடுவதை வாசித்துவிட்டு மறந்துவிடுகின்றோம். ஒரு குழந்தையை, குழந்தையின் பெற்றவர்களை எப்படி எல்லாம் அச்சம்பவம் பாதிக்கும் என்பதும் இம்மாதிரி நிகழ்வுகள் காவல்துறையில் புகார் செய்யப்பட்டால்தான் தன் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம் இன்னொரு குழந்தைக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்ற சமூக அக்கறையும் தொனிக்க எழுதப்பட்டிருக்கும் கதை.


தையல் சிறுகதையும் எம்.ஸீ சிறுகதையும் பெண்ணியத்தளத்தின் மிகத் தீவிரமானக் கருத்துகளை நறுக்கு தெறித்தாற்போல கச்சிதமாக படைத்திருக்கும் கதைகள் இவருடைய பெண்கள் குடும்பம், குடும்ப உறவுகளின் பின்னணியில் குடும்பத்திற்கு முதலிடம் கொடுத்து தன்னை, தனக்கான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்படுபவர்களாக படைக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடம் ஏற்படும் சிலச் சிந்தனை மாற்றங்களைப் போகிற போக்கில் சொல்லிச்செல்கிறார்.


முடிவுலும் ஒன்று தொடரலாம் குறுநாவலில் ' பலமாதங்கள் சேர்ந்துவாழ்ந்து ஒத்திகை பார்த்துவிட்டு ஒத்து வரும் போலிருந்தால் மணமுடிக்கலாமென்று யோசித்துப் பதிவு திருமணம் செய்து கொண்டு பிறகு சம்பிரதாயப்படி ஒருமுறை ஊரைக் கூட்டி மணமுடிப்பார்களாம். லாவண்யாவிற்குக் கேட்கக்கேட்க அப்படியே
தலைகீழாய் நடக்கும் விநோதத்தை அறிந்து ஒரு புறம் நெருடலாய் இருந்தாலும் மறுபுறம் அதில் இருந்த நடைமுறை சாதகங்களையும் யோசிக்க ஆரம்பித்தாள்' (பக் 72) என்று அவள் யோசிக்க ஆரம்பிப்பதில் சொல்லாமல் சொல்லிச்செல்வார்.


ஆண்-பெண் இல்லற வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பதுதான் முக்கியம். அந்தப் புரிதல் இல்லை என்றால் அழகு, அறிவு, வேலை, சம்பாத்தியம் எல்லாமே அர்த்தமிழந்துவிடுகின்றன. 'பொல்லாதவனனோட குடித்தனம் நடத்திடலாம், புரியாவதனோட எப்படி குடித்தனம் நடத்த?' (பக் 79) என்று
கதைப்போக்கில் சொல்லிச் செல்வதை ரசிக்கலாம். கதை மாந்தர்களில் போக்கில் கதை நகர்த்திச் செல்லும்போது கதையாசிரியர் எவ்வளவு கவனமாக இருந்தாலும்
நுழைந்துவிடுவது ஏற்படுவதுண்டு. வேண்டியது வேறில்லை என்ர குறுநாவலில் செல்வி என்ற வீட்டுவேலைக்கு வந்திருக்கும் பெண் 'இந்த முறை அலங்காரங்கள் வழக்கத்தைவிடக் கொஞ்சம் கலையுணர்வோடு இருந்ததாகச் செல்விக்குத் தோன்றியது' (பக் 38) என்று சொல்லும் போது கலையுணர்வு என்ற பெரிய விசயத்தை புரிந்து கொள்ளக்கூடிய திறன் செல்வியின் மீது விழுந்திருக்கும் ஆசிரியரின் பார்வை. ஆனாலும் அடுத்து வரும் உரையாடல்கள் அதை ஓரளவு சமன் செய்திருப்பது இதம் தருகிறது.


குழந்தையை எடுத்துக்கொண்டு கிஷோர் ஓடிவிடுகிறான். லி•ப்டில் தேடி ஓடும் தாயின் மனநிலையில் அந்த நேரத்தின் உணர்வு கொந்தளிப்பில் மூளை ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்களில் ஓடுவதாக காட்டியிருப்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.


ஜெயந்தியின் ஏழாம்சுவை உயிர்மை, அமுதசுரபி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.தன்னுடைய அரைநிர்வாண உடையையே ஓர் ஆயுதமாக்கியவர் மகாத்மா காந்தி என்ற வரலாற்று செய்தியுடன் விரிகிறது
ஆடைமொழி என்ற கட்டுரை. சிங்கையின் பல்வேறு விழாக்கள், நம்பிக்கைகள், செய்திகள் தரும் கட்டுரைகளாக ஏழாம்சுவை கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

புலம் பெயர்ந்த வாழ்க்கை நம்மில் பலருக்கு திணிக்கப்பட்டுள்ளது, சிலருக்கு கை கூடிய கனவாகி இருக்கிறது. ஆனால் அந்தப் பின்புலத்தில் எழுதுபவர்கள் அதிகமில்லை என்ற ஒரு குறைபாட்டை முழுக்கவும் இல்லாது செய்திருக்கிறது ஜெயந்தி சங்கரின் ஒவ்வொரு பக்கங்களும்.தோழி ஜெயந்திசங்கருக்கு வாழ்த்துகள்.

முடிவிலும் ஒன்று தொடரலாம் (குறுநாவல்கள்)

வெளியீடு

சந்தியா பதிப்பகம்
57 A, 52 வது தெரு,
அஷோக் நகர்,
சென்னை - 83,
இந்தியா

தொ.பே - 2489 6979 / 93810 45211

ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா

--- வெங்கட் சாமிநாதன் (சிஃபி.காம்)



பெரனாக்கான் என்றால் என்ன என்று இதை வாசிப்பவர் எவருக்காவது தெரியுமா? யோசிக்க வேண்டாம், பதிலைத் தேடும் பாவனையில் ஆகாயத்தைப் பார்க்க வேண்டாம். சிந்திக்கும் பாவனையில் தலையைச் சொரிந்து கொடுத்துக் கொள்ளவும் வேண்டாம். தெரியும், அல்லது தெரியாது என்று இரண்டில் ஒன்றே உடனே பதிலாக வரும் சாத்தியம் உண்டு. தெரியாது. சரி. சட்டைக்காரன் என்றால் என்ன, யாரைச் சொல்வார்கள் என்று தெரியுமா? இந்த தலைமுறைக்குத் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை. ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்டு வந்த காலத்தில், இங்கேயே தங்கி இந்தியப் பெண்ணை மணந்து வாழ்ந்த ஆங்கிலேயர்களின் வாரிசுகளாக இந்தியர்களாகிவிட்டவர்களுக்கு, தமிழ் நாட்டில் சட்டைக் காரன் என்று பெயர். அவர்கள் மாத்திரம் தான் சட்டை அணிந்தவர்களா, அதனால் தான் அவர்கள் சட்டைக்காரர் ஆயினரா என்றால், தெரியாது என்பது தான் பதில். இந்த சட்டைக்காரர் குடும்பத்துக் குழந்தைகளைப் பார்த்து வியந்த என் நண்பர் சொல்வார்: அவர் மன்னி, "டேய் சீனு, இத்துனூண்டு குழந்தகள்ளாம் என்னமா இங்கிலீஷ் பேசறதூங்கறே! என்னமாடா இத்தனை சீக்கிரமா இங்கிலீஷ் கத்துண்டுதுகள் இந்த வாண்டெல்லாம்!" என்று சொல்லி ஆச்சரியப்படுவாளாம். ஆங்கிலோ இந்தியருக்கு என்று ராஜ்ய சபாவில் ஒரு இடம் ராஷ்டிரபதியின் நியமன உறுப்பினராக ஒதுக்கப்பட்டிருந்து. இப்போதும் அது உள்ளதா, அந்த இடத்தில்யார் என்றெல்லாம் தெரியாது.

ஆரம்பித்த விஷயத்திற்கு வருவோம். தென் சீனாவிலிருந்து வணிகம் செய்ய மலாய் தீபகற்பம் வந்து சேர்ந்த் சீனர்கள் நாளடைவில் மலாய் பெண்களை மணந்து மலேசியாவிலேயே தங்கி விட்டனர். அந்நாட்களில் சீனர்கள் தம் குடும்பத்தோடு வெளிநாடு செல்வது அனுமதிக்கப்படவில்லை. நம் ஊர் செட்டியார்கள் மாதிரி அவர்கள் தனியாகத்தான் சென்று வியாபாரத்தை மேற்கொண்டனர். ஆனால் நம் ஊர் செட்டியார்கள் அனேகர் தமிழ் நாடுதிரும்பினர். இப்படி வந்த சீனர்களுக்கும் மலேசியர்களுக்கும் பிறந்த கலப்பினத்தவர் தான் பெராக்கான் என்று அழைக்கப்படுவதாக ஜெயந்தி சங்கர் நமக்குச் சொல்கிறார். இவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால், அவர்கள் தம் தனித்வ அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இவர்கள் உடைகள், சாப்பாடு, மொழி எல்லாமே சீன மலாய் கலப்பாகத்தான் இருக்குமாம். உணவு வகைகளில் இந்தோனேசிய, இந்திய கலவைகளையும் காணமுடிகிறது என்கிறார் ஜெயந்தி சங்கர். இவர்கள் பௌத்தர்கள். ஜாதகப் பொருத்தம் நக்ஷத்திரப் பொருத்தம் பார்த்துத் தான் வெற்றிலை மாற்றி திருமணத்தை நிச்சயப்படுத்திக் கொள்வார்களாம். ஆக பகுத்தறிவுப் பிரசாரத்திற்கு இங்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. சிஇவர்கள் பேசும் மொழிக்கு பஹாசா பாபா என்று பெயர். பாபா பெரனாக்கானைக் குறிக்கும். பஹாசா என்பது பாஷா என்னும் சமஸ்கிருதத்தின் திரிபு தான். இந்தோனேசிய மொழியையும் பாஷா என்றே அழைக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பெற்ற தாக்கம் அது. இவர்கள் மூத்தோரை மதித்தால் என்பது இவர்களது பண்பு. இரண்டு பிறந்த தினங்களைத் தான் இவர்கள் கொண்டாடுகிறார்கள். முதல் வருடம், பின் 61-வது பிறந்த வருடம். இந்த 61 என்ற எண்ணும் சுழற்சியும் மிக பரவலாக பல நாடுகளில் இடங்களில் காணப்படுகிறது. இந்த எண்ணில் சுழற்சியில் என்ன மகத்துவமோ. மலேசிய சிங்கப்பூர் அரசுகள் தம் மக்களின் கலாச்சார அடையாளங்களைக் காப்பாற்றுவதில் கவனம் கொள்கிறது என்றாலும் இளம் தலைமுறையினரிடம் இந்த அக்கறை இருப்பதில்லை என்கிறார் ஜெயந்தி சங்கர். எங்கேயும் இந்தக் கதைதான் போலும்.

ஜெயந்தி சங்கர் நமக்குச் சிங்கப்பூரையும் அதன் மக்களையும் பற்றி மட்டும் சொல்வதில்லை. சிங்கப்பூரில் தமிழர், சீனர், மலாய் மக்கள் வாழ்கின்றனர். இவர்களைப் பற்றிச் சொல்லும் போது சீனாவும் மலாயாவும், அத்தோடு இந்தோனேஷியாவும் கூட வந்து சேர்ந்து கொள்கின்றனர். ஒன்றைப் பற்றிப் பேசும்போது மற்றதும் உடன் வந்து விடுகிறது.

அப்படி வந்ததில் ஒன்றுதான் மிக ஆச்சரியம் தரும் சரித்திரத் தகவல். கொலம்பஸ¤க்கும் வாஸ்கோட காமாவுக்கும் முன்னரே, 1405- ம் வருடம் 317 கப்பல்களும், 27.870 படைவீரர்களையும் கொண்ட ஒரு பெரிய கப்பற்படையுடன் தன் முதல் பயணத்தைத் தொடங்கியது யுனான் என்னும் தென் சீன மாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தின் நட்பு வாய்க்கப்பெற்ற செங் ஹ என்னும் இஸ்லாமிய சீனன். முதலில் தரை வழியாக மக்காவுக்குச் சென்றவன். அரபி மொழி தெரிந்தவன். மலாக்கா, இந்தோனேசியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா என்றெல்லாம் சுற்றி அமெரிக்காவையும் தொட்டவன். மெக்ஸிக்கோ கலி•போர்னிய தீவுகள் எல்லாம் அவன் காலடி பட்ட இடங்கள். போர் புரிந்த இடங்கள். அரிய பொருட்களையும், பெண்களையும், அரிய தாவரங்களையும், மிருகங்களையும் கப்பலில் நிரப்பிக்கொண்டு சைனா திரும்பினால், அவன் உலகம் சுற்றுவது ஒரு தடவையோடு நின்று விடுமா என்ன? அக்காலங்களில் உலகிலேயே சீன கடற்படைதான் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. 1430 -ம் ஆண்டு அவன் ஏழாம் முறையாக மேற்கொண்டது தான் அவனது கடைசிப் பயணமாகியது. 1433-ம் ஆண்டு அவன் வழியில் இந்தியாவில் மரணமடைந்ததாகவும், 1435-ல் அவன் நான் ஜிங் மாநிலத்தில் புதைக்கப்பட்டதாகவும் வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. சீனாவில் செங் ஹவின் பயணங்கள் குறித்த கருத்தரங்கு, செங் ஹ தன் பயணத்தை முதலில் தொடங்கிய தாய்சாங்கில் ஒரு பிரும்மாண்ட விழா, சிங்கப்பூரிலேயே கூட செங் ஹ வுக்கென ஒரு பெரும் அருங்காட்சியகம் என செங் ஹ வின் நினைவு சீனர்கள் வாழும் இடமெல்லாம் கொண்டாடப்படுகிறது. செங் ஹ என்ற பெயரே நமக்குப் புதிது. அவன் சாகஸங்கள் பிரமிப்பைத் தருபவை. இருப்பினும் கொலம்பஸ் பெயரைத் தான் உலகறியும்.

ஹினா மட்சுரி என்றால் நம்மூரில் கொலு கொண்டாடப்படுவது போல ஜப்பானிலும் கொண்டாடுகிறார்களாம். அதற்குப் பெயர் ஹினா மட்சுரி. வேடிக்கையாக இல்லையா? கொலு கொண்டாடப்படுவது எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் மட்டுமே. அதுவும் சில குடும்பங்களில் மாத்திரமே. அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் ஜப்பானில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது என்றால்? அதிலும் ஜப்பான் பொம்மைகள் எவ்வளவு கலை அழகும் செய்நேர்த்தியும் கொண்டவை! அதைப் பார்த்தபின் நம் கொலு பொம்மைகள் ஏன் அத்தனை அழகையும் செய்நேர்த்தியையும் கொள்ளவில்லை என்று யோசிக்கத் தோன்றுகிறது. நம் சிற்ப பாரம்பரியம் மிக பழமையானது. நீண்டதும் வளமையானதும் கூட. இருப்பினும்...... அதெல்லாம் சரி. இந்த ஒற்றுமை எப்படி நேர்ந்தது!. நேர்ந்துள்ளது. 1990களில் தில்லியில் ஜப்பானிய கலைகளின் ஒரு பரந்த கண்காட்சி, கருத்தரங்கு எல்லாம் நடந்தது. அதில் பேசிய ஒரு ஜப்பானிய அறிஞர், ஜப்பானிய இசையில் தென்னிந்திய தாக்கம் உண்டு என்றார். நம்மூர் காரர் யாரும் சொல்லியிருந்தால், இதுவும் ராமாயண புஷ்பகவிமானம் போன்ற சமாச்சாரம் என்று ஒதுக்கியிருப்பேன். அந்த ஜப்பானியர் சொன்னதை சாட்சியப்படுத்தும் முகமாக, காஞ்சியிலிருந்து அசோகர் அனுப்பிய தூதுவர்களோடு, காஞ்சியிலிருந்து இரு சங்கீத கலைஞர்களும் சென்றார்கள் என்ற செய்தியும் படித்திருந்ததும் நினைவில் இருக்கிறது. இப்படி நிகழ்வ துண்டு தான். இப்போதைக்கு இன்னொரு சம்பவத்தையும் சொல்லலாம். ஒரு நைஜீரியன் பாடகர் (அம்மையார்) பாடிக்கொண்டிருந்தார் தில்லியில் நடந்த ஒரு சர்வதேச கலை விழாவில். எனக்கு அடுத்து பக்கத்தில் இருந்தது சுப்புடுவும் வெங்கட் ராமன் என்னும் என் நண்பரும். திடீரென என் நண்பர் சுப்புடுவிடம், "பாரும் இது மோஹனம் இல்லியோ!" என்றார், சுப்புடுவும் ஒப்புதலுடன் தலையாட்டினார். எனக்கு அந்த மோகனத்தின் சாயல் ஒன்றும் புரியவில்லை. என் சங்கீத ஞானத்திற்கு "ஏன் பள்ளி கொண்டீரய்யா " என்றோ, "மயில் வாகனா, வள்ளி மன மோஹனா" என்றோ "ராமா நின்னே நம்மினவாரு.." என்றோ பாடினால் தான் மோகனம் எனக்குப் புரியும். சாயல் எங்கு விழுந்திருக்கிறது என்றெல்லாம் எனக்குப் புரிபடாது. எதற்குச் சொல்கிறேன் என்றால் இப்படி உலகப் பொதுமையான பல உணர்வுகள், சடங்குகள், விழாக்கள் நம்பிக்கைகள், கற்பனைகள் நாடு, கலாச்சார, மொழி எல்லைகள் தாண்டி காணப்படும். ஆனால் ஜப்பானின் நாடு முழுதும் தழுவிய ஹினா மட்சுரிக்கும் தமிழ் நாட்டில் சில இடங்களில் மட்டுமே காணப்படும் கொலுவுக்குமான ஒற்றுமை ஆச்சரியப்படுத்தும்.

தமிழ் நாட்டு கொலு நவராத்திரி எனப்படும் ஒன்பது நாட்கள் நீடிக்கும். இதன் பின் புராணக்கதைகள் இருப்பது போலவே ஹினா மட்சுரிக்கும் ஒரு வரலாறு, அதன் பரிணாம வளர்ச்சி எல்லாம் உண்டு. ஜப்பானிலும் இது சிறுமிகளை மையமாகக் கொண்ட விழா. ஜயந்தி சங்கர் இது பற்றி விவரிக்கும் பல காட்சிகள், 'சிறுமிகள் விளக்குகளைக் கையிலேந்தி செல்லும் அழகு' தமிழ் நாட்டில் சிறுமிகள் தம்மை அலங்கரித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக குங்கும சிமிழை ஏந்திச் செல்லும் காட்சிகளை நினைவு படுத்தும். அவரவர் வீட்டில் குடும்பச் சொத்தாகக் பாதுகாக்கப்படும் பொம்மைகள், 15 படிகள் வரை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொலு. தமிழ் நாட்டில் வீட்டு வைபவமாகவே இருக்கும் இது ஜப்பானில் ஊரே கொண்டாடும் அளவில் பெரிய விழாவாகவும் இருக்கிறது. இதையெல்லாம் எண்ணும் போது பகுத்தறிவுக் காரர்கள் எதை இழந்து தம் வாழ்க்கையை வரட்சியாக்கிக்கொள்கிறார்கள் என்று என்ணத் தோன்றுகிறது.

இந்தோனேசியாவின் பாலி தீவு மக்களைப்பற்றி எழுதுகிறார் ஜெயந்தி சங்கர். இந்தியாவிலிருந்து பரவிய ஹிந்து கலாச்சாரமும் புராணங்களும், கோயில்களும் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறோம். பாலி தீவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த ராமாயண நாட்டிய நாடகங்கள், பாவைக் கூத்துக்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர்களது ராமாயணக் கதைகள் கொஞ்சம் நம்மைக் குழப்பினாலும், - நம்மிடையே கூட எத்தனை மாறுபட்ட ராமாயணங்கள் இருக்கின்றன! - அவர்களது ராமாயண நடன நாடகங்களும், பாவைக்கூத்தும் மிகச் சிறப்பானவை, அவற்றுக்கிணையானவை அல்ல நம்மது என்ற நினைப்பு எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால் நான் செய்த ஒரு தவறு, இவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் புத்த இந்துமதக் கலவையான ஆகம இந்து பாலி மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜெயந்தி ஷங்கரிடமிருந்து தெரிந்து கொள்கிறேன். இவர்கள் பெயர்களை வைத்து நாம் ஏதும் அனுமானிக்க முடியாது. முஸ்லீம்கள் பெயர்கள் எல்லாம் மூல சமஸ்கிருத வடிவத்திலிருந்து சற்று மாற்றம் பெற்றவையாகவே இருக்கும். அவர்கள் விமான போக்குவரத்து சேவைக்குப் பெயர் கருடா ஏர்வேஸ். முதல் சுதந்திர இந்தோனேசிய தலைவர் பெயர் சுகர்னோ. காதுக்கு இனிமையானவர் என்று அர்த்தம். அவரது மகள், பின்னர் பிரதம மந்திரியானவர், சுகர்னோ புத்ரி. இவ்வளவு இருக்கும் போது சாதி இல்லாமல் போகுமா? அதுவும் உண்டு என்று தெரிகிறது. நம் வீடுகளில் பூஜை அறை இருப்பது போல இவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர் வசதிகேற்ப கோயில் ஒன்று கட்டிக்கொள்வார்களாம். நமது பாரம்பரிய நம்பிக்கைகள் சடங்குகள் பலவும் இவர்களிடமும் உண்டு. சாமி வருவதும் உண்டு. தக்சு என்பார்கள். தக்சு தான் இறந்த மூதாதையர், தெய்வங்கள் ஆகியோருடன் இன்று வாழ்பவர் தொடர்பு கொள்ள அழைப்புப் பெற்றவர். இந்த தக்சு யாருக்கும் வரலாம். இதைச் சுற்றி எழும் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், சடங்குகள், மந்திரங்கள் தீமிதி என பலவும் உண்டு. பல நம்பிக்கைகள், தீயவை நீங்கும், நல்ல அறுவடை கிடைக்கும், நோய் நொடிகள் தீரும் போன்ற நம்பிக்கைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. உலகெங்கும் காணப்படும் காட்சிகள் இவை. ஆப்பிரிக்க சமூகங்களில் இம்மாதிரியான நிகழ்வுகளில் உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்கள், வாத்தியங்களின் முழக்கம், இவற்றாலேயே மன நோய்கள் பல தீர்க்கப்படுகின்றன என மருத்துவ ஆராய்வுகளே சொல்கின்றன. நம்மூரிலும் பேயோட்டும் காட்சிகளின் சூழலே இம்மாதிரியான ஒரு நாடகமாகத்தான் இருக்கும். உண்மையில் அந்த சூழலும் நம்பிக்கையும் தான் நோயைக் குணப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்,.

ஜெயந்தி சங்கர் இப்படி பல விஷயங்களைப் பற்றி மிக விரிவாகவும், கூர்ந்த பார்வையுடனும் எழுதியிருக்கிறார். கோலாலம்பூரின் பெட் ரோ நாஸ் இரட்டைக்கோபுர கட்டிடம் பற்றி, ஆடையே மொழியாகவும் கருத்து வெளிப்பாடுமாவது பற்றி, சிங்கப்பூர் சீனர்கள் கொண்டாடும் ஆவிகளுக்கு உணவு படைத்தளிக்கும் விழா பற்றி, சந்திர ஆண்டு பற்றி எல்லாம் எழுதுகிறார். இவையெல்லாம் நம் கலாச்சாரத்திலும் வேறு உருவங்களில் வழங்குகின்றன தான். தமிழ் வருடக் கணிப்பும் சந்திரனைக் கணக்கில் கொண்டது தான். அதனால் தான் மாதங்களின் தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேறு படுகின்றன. நமக்கும் மூதாதையரை நினைவு கொண்டு உணவு படைக்கும் சடங்குகள் உண்டு. இந்த ஒற்றுமை வேற்றுமைகள், எப்படி எந்த தொடர்பும் காரணமாக இல்லாது பல சடங்குகள், நம்பிக்கைகள், உலகின் எல்லாக் கலாச்சாரத்திலும் காணக்கிடைக்கின்றன என்பது ஆச்சரியம் தரும் ஒன்று.

சிங்கப்பூர் மலாயா கல்வி நிலை பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் ஒப்பீடு செய்யும் போது அவர் தரும் புள்ளி விவரங்கள், முடிவுகள், நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடும். மற்ற நாடுகளை விட நாம் கல்விக்குச் செலவிடுவது மிகவும் குறைவு என்றும், ஆரம்ப கல்வியில் நாம் மற்ற நாடுகளைவிட அதிக தரத்தில் இருப்பதாகவும், நம் சில கல்வி நிறுவனங்கள் உலக தரத்தவை என்றும் சொல்கிறார். எல்லாம் சரி. புள்ளி விவரங்களும் சரி. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்குப் பார்க்கக்கிடைக்கும் சாம்பிள் கல்லூரி மாணவர்களையும் முனைவர்களையும், தமிழ் அறிஞர்களையும் பார்த்தால், நாம் அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். போகட்டும்.

ஜெயந்தி சங்கர் அவரைச் சுற்றி இருக்கும் உலகையும் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் எவ்வளவு ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தன் இயல்பிலே கூர்ந்து கவனிக்கிறார், அவற்றில் தானும் பங்கு கொள்கிறார் என்பதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தம் லண்டன் பயணத்தில் எங்கே தோசை கிடைக்கும் என்று தேடியதையும் அது கிடைத்ததும் பெற்ற பரமானந்தத்தையும் எழுதியுள்ள, பாளையங்கோட்டையிலிருந்து தில்லிக்குச் சென்றாலும் அங்கும் ஒரு பாளையங்கோட்டையை உருவாக்கிக் கொண்டு அதிலேயே திளைத்துத் தாம் வாழ்க்கையைக் கடத்திய இலக்கியப் பெருமக்களை எனக்குத் தெரியும். ஜெயந்தி சங்கர் மிக மிக வித்தியாசமானவர்.



ஏழாம் சுவை (கட்டுரைகள்)

வெளியீடு


உயிர்மை பதிப்பகம்,
எண்:11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-600018,
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: 091 - 044 - 24993448.
மின்மடல்: uyirmmai@yahoo.co.in

ஏழாம் சுவை

நூலைப் பற்றி........


- புலவர் செ. இராமலிங்கன்


புதுச்சேரி - மின்னிதழ்






எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய, “ஏழாம் சுவை” என்னுங் கட்டுரைத் தொகுப்பில் “ஆவிகள் புசிக்குமா?” தொடங்கி “ஏழாம் சுவை” ஈறாகப் பதினொன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் அனைத்திலும் சிங்கப்பூரை அடுத்தடுத்துள்ள மலேசியா, ஜப்பான் போன்ற தீவு நாடுகளில் பயின்று வரும் பண்டைய நிகழ்வுகள், விழாக்கள் பற்றிய செய்திகளை ஒப்பாய்வுடன், நல்ல எளிய தமிழ்நடையில் ஆசிரியர்க்கே உரிய பாணியில் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைத்திருக்கிறார்.



“ஆவிகள் புசிக்குமா?” என்னுங் கட்டுரையின் முன்னுரையாக சீன நாட்டுச் சிறுகதையொன்றை புத்த மதத்தில் வழங்கி வருவதை கூறுகையில், “ சீன புராணப் பாத்திரமான மூலான் தன் அம்மாவை மேலுலகத்திற்கு காணச்சென்றான். அம்மூதாட்டி உயிரோடிருக்கையில், மிகவும் சுயநலவாதியாகவும், தீயவளாகவும் இருந்ததால், மேலுலகில் முட்படுக்கை மீது கிடப்பதைப் பார்க்க நேரிடுகிறது. ஆவியுருவிலிருந்த அவள் மிக்கப் பசியோடு துன்பப்படுவதைக் கண்டு அவளுக்கு உணவூட்ட முயலுகையில், ஒவ்வொரு முறையும் உணவுக் கவளம் வெறும் நீறாகப் போகின்றது. இதனால் வருந்திய மூலான், பூமிக்குத் திரும்பித் தன்னுடைய புத்த ஆசானிடம் அம்மாவைக் காக்கும் வழியினை கேட்கையில், அவர் அவனை உணவு, பானங்கள் முதலானவற்றைத் தயாரித்து முன்னோர்களின் ஆவிகளுக்குப் படையலிட வேண்டுமெனக் கூறுகிறார். பின்னர் பௌத்த பிக்குகளும் பிக்குனிகளும் கூடி மந்திரங்கள் ஓதிய பிறகே அத்தாயின் பசி போகிறது. இதன் பிறகு புத்த பிக்குகளுக்கு முன்னோர் நினைவாக உணவளிக்கும் வழக்கம் வந்தது....”, என்கின்ற சீனர்களின் மரபு வழிக் கதையின் வாயிலாக, ஆவிகள் புசிக்கும் என்பதை கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.



நாளடைவில் சீனர்கள் இவ்விழாவினை ஒரு மாதம் கொண்டாடி வரத் தொடங்கி இருக்கின்றனர். இந்த ஒரு மாத காலத்தில், ஆவிகள் தங்கள் சுற்றத்தினர் அருகில் பாம்பு, வண்டு, பறவை, புலி, ஓநாய், நரி முதலான எந்த வடிவத்திலும் வரும் என்பதாலும்; அவை மனிதர்கள் உடலில் புகுந்து மன உளைச்சலை, மனநோயினை ஏற்படுத்தும் என்பதாலும், மறக்காமல் ஆண்டுதோறும் உணவளித்து அன்பு செலுத்துவோரின் குடும்பத்திற்கு செல்வம் கொழிக்கச் செய்து சிறப்புகளை உண்டாக்கும் என்பதாலும், மேலும் சீனர்கள் இக்கால கட்டத்தில் பய உணர்வுடன் நடந்து கொள்வர் என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது.



மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் விரும்பிப் பயன்படுத்திய பொருட்களையும், விரும்பியும் கிட்டாத பொருட்களையும், பெரிய அளவில் பொம்மைகள் போல் செய்து, தீயிட்டுக் கொளுத்தி ஆவிகளுக்குப் படைப்பது, சீனர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், வழக்காக இருந்து வருவதை, இதற்காக பல அங்காடிகளும், தொழிலாளர்களும் ஈடுபட்டிருப்பதை கட்டுரையாளர் படம் பிடித்துக் காட்டுகிறார். இன்றைய அறிவியல் உலகில் வாழும் மக்களின் எண்ணங்களையும், கருத்துகளையும் பகுத்தறிவுடன் கூறியச் சீனத் தத்துவ அறிஞர் கன்பூசியசின் சீடர் ஒருவர் ஆவிகளுக்கு எப்படித் தொண்டு செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு, “மனிதனுக்குத் தொண்டு செய்யாத போதில் ஆவிகளுக்கு எப்படித் தொண்டாற்றுவாய்? வாழ்வையறியாத போதில், சாவை எப்படியறிவாய்?” என்ற கன்பூசியசின் வினாவுடன் கட்டுரையை முடித்திருக்கும் உத்தி, கட்டுரையாசிரியரின் மனித நேய உணர்வை வெளிப்படுத்துகிறது.



இத்தகைய ஆவிகள் பற்றிய கட்டுக்கதைகள் எல்லா நாடுகளிலும் உள்ளன. வளர்ந்த நாடுகள்கூட அறிவியல் நுட்பங்களைக் கையாண்டு நம்பமுடியாத பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதையமைப்புகளைக் கொண்ட பல திரைப்படங்களை வெளியிடுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மறைந்த நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்கள் காட்டிய நல்வழியில், அவர்கள் விட்டுச்சென்ற குடும்பப் பணிகளையும், பொதுத் தொண்டுகளையும் கடமையெனக் கருதி, நாம் செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே, இத்தகைய கட்டுக் கதைகளை பழங்காலத்தில் புனைந்துள்ளனர் என்பதை “ஆவிகள் புசிக்குமா” கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.



ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், என்பதற்கேற்ப, மற்ற பத்துக் கட்டுரைகளும் மிக நன்றாகவே அமைந்துள்ளன. அவற்றையும் படித்து இன்புறுதல் சுவைஞர்களின் கடமையாகும்.



ஏழாம் சுவை (கட்டுரைகள்)

வெளியீடு

உயிர்மை பதிப்பகம்,
எண்:11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-600018,
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: 091 - 044 - 24993448.
மின்மடல்: uyirmmai@yahoo.co.in